Sunday, May 19, 2024
Home » வாழைச்சேனையில் இன்று தமிழ்த்தாய் புத்தக இல்லம் அங்குரார்ப்பணம்

வாழைச்சேனையில் இன்று தமிழ்த்தாய் புத்தக இல்லம் அங்குரார்ப்பணம்

by Rizwan Segu Mohideen
September 21, 2023 6:16 am 0 comment

வாழைச்சேனை, கருணைபுரம், 8 ஆம் குறுக்கு வீதியில் தமிழ்த்தாய் புத்தக இல்லம் இன்று காலை 10. 30 மணிக்கு திறந்து வைக்கப்படுகின்றது. தமிழர் சமூகத்தின் சமயம், கல்வி, கலை, இலக்கியம் போன்ற துறைகளின் வளர்ச்சிப் பணிக்கு பங்களிப்புச் செய்யும் உன்னத நோக்குடன் தமிழ்த்தாய் புத்தக இல்லம் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

தமிழ்த்தாய் புத்தக இல்லத்தின் நிறுவனர் க. யுவராஜன் ஆவார். அதன் இயக்குநராக எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான அ. ஸ்ரீதர் பணியாற்றுகின்றார்.

இத்திறப்புவிழாவில் இலக்கிய, கலை ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் தமிழ் இலக்கியம், சைவசமயம், பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான அச்சு வேலைகளுக்கு பங்களிப்பு செய்வதற்காகவே ‘தமிழ்த்தாய் புத்தக இல்லம்’ உருவாக்கப்படுகின்றது.

இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் பிரதேச தொகுப்பு நூல் வெளியீடுகள், பிரதேச படைப்பாளிகளின் படைப்புக்களை தொகுத்து வெளியிடுதல், கஷ்டப்பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்குகள் மற்றும் போட்டிப் பரீட்சைகள் நடத்துதல், அறநெறி வகுப்பு மாணவர்களுக்கான திருமுறைப் புத்தகங்கள், சமய அறிவு வினாவிடை போட்டி பரீட்சைகள் நடத்தி பரிசில் வழங்குதல் போன்றவற்றுடன், ஒவ்வொரு வருடமும் விபுலானந்தர், பாரதியார் போன்றோரது நினைவு தின விழாக்களுடன், சமூக, கலை இலக்கிய செயற்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ‘பாரதி நினைவு விழா -2023’ நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வாழைச்சேனை தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு வெளியீட்டிற்கு பின்னர், கவிதைத் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது.

வாழைச்சேனை பொதுசன நூலகத்திற்கு கடந்த வருட இறுதியில் சிறுவர் நூலகம் அமைக்க வாழைச்சேனை விபுலானந்த வீதியைச் சேர்ந்த, தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வதிகின்ற க.யுவராஜன் உதவியிருந்தார். அவரை போசகராகக் கொண்டு, வாழைச்சேனை பொதுசன நூலக உத்தியோகத்தரும் எழுத்தாளருமான எஸ்.ஏ.ஸ்ரீதர் அவர்களால் ‘தமிழ்த்தாய் புத்தக இல்லம்’ உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT