Monday, May 13, 2024
Home » நாட்டை கட்டியெழுப்புவதற்கான சரியான பொருளாதாரத் திட்டங்கள்

நாட்டை கட்டியெழுப்புவதற்கான சரியான பொருளாதாரத் திட்டங்கள்

by Rizwan Segu Mohideen
September 21, 2023 6:07 am 0 comment

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகளுக்கு உள்நாட்டு சமூகம் மாத்திரமல்லாமல், உலக நாடுகளும் சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களும் கூட உதவி ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன.

இதன் பயனாக கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் பாதிப்புகளும் நெருக்கடிகளும் பெரும்பாலும் நீங்கியுள்ளன. பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. எரிபொருள், எரிவாயுக்காக நீண்ட வரிசைகளில் நாட்கணக்கில் காத்திருக்கும் யுகத்திற்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பல பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

அதேநேரம் வெளிநாடுகளில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்களைத் திருப்பி செலுத்தும் நிலையை நாடு அடைந்துள்ளது. பங்களாதேசத்திடம் பெற்றுக்கொண்டுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை முதல் கட்டமாக 50 மில்லியன் டொலர்களாகவும், இரண்டாம் கட்டமாக 100 மில்லயன் டொலர்களாகவும் திருப்பி செலுத்தியுள்ளமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

பொருளாதார நெருக்கடியினால் சர்வதேசத்தில் தனிமைப்பட்டிருந்த இந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதன் பயனாக உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் உதவி ஒத்துழைப்புககளை நல்கி வருகின்றன.

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் மாத்திரமன்றி, நாட்டு மக்களும் பெரும் அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் அவர்களுக்கு சாதகமானதாக இல்லாத ​போதிலும், அது நாட்டுக்கு அவசியமானது என்பதை மக்கள் புரிந்து கொண்டு செயற்படுகின்றனர். இது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.

இவற்றின் பயனாக பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வீழ்ச்சி கண்டிருந்த நாடு குறுகிய ஒரு வருட காலப்பகுதிக்குள் மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசிக்க வழிவகுத்துள்ளது. பொருளாதார ரீதியில் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களும் அவ்வேலைத்திட்டங்களுக்கு மக்கள் அளித்துவரும் ஆதரவும் ஒத்துழைப்பும் இதற்கு பாரிய பங்களிப்பை நல்கியுள்ளன.

இவ்வாறான சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கும் இடையிலான சந்திப்பு ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது, ‘இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்காக உலக வங்கி அளித்த ஆதரவு ஒத்துழைப்புகளுக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாடு முழுமையான பொருளாதார மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்துள்ளதாகவும் இலங்கையின் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அடுத்த தசாப்தத்தில் அதிக பொருளாதார வளர்ச்சி விகித்துடன் நாடு முழுமையான இயல்பு நிலைக்கு திரும்புமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உலக வங்கியின் தலைவர், ‘ஜனாதிபதி ஆரம்பித்துள்ள இச்செயற்றிட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றால் இலங்கை எதிர்பார்க்கும் இலக்குகளை விரைவாக அடைய முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, அந்த முயற்சிகளுக்கு உலக வங்கியின் முழுமையான ஒத்துழைப்பு கிட்டும்’ என்றும் உறுதியளித்துள்ளார்.

உலக வங்கித் தலைவரின் இக்கூற்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்பவென முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பெறுமதியையும் முக்கியத்துவத்தையும் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாடொன்றை மீளக்கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்க வேண்டிய சரியான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்து வருவதையே உலக வங்கி தலைவரின் கூற்று எடுத்துக்காட்டுகிறது. உண்மையான பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டதாகவே ஜனாதிபதியின் அனைத்து வேலைத்திட்டங்களும் அமைந்துள்ளன. அதனை உலக வங்கி தலைவரின் கூற்றும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நிலைமை இவ்வாறிருக்கின்ற போதிலும், பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பவென முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்கும் அவற்றின் ஊடாக அற்ப அரசியல் இலாபம் அடைந்து கொள்வதற்கும் முயற்சிகள் இடம்பெறவே செய்கின்றன. ஆனால் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது. அதற்கு ஒருபோதும் இடமளித்து விடக்கூடாது என்பதே மக்களின் ஒரே எதிர்பார்ப்பாகும்.

ஆகவே மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய பொருளாதார ரீதியில் வளமான தேசத்தை உருவாக்கவென முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கப்பட வேண்டும். அதுவே இப்போதைய தேவையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT