Monday, May 6, 2024
Home » அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் மாணவரை ஆக்கிரமித்துள்ள ரியூஷன் வகுப்புகள்!

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் மாணவரை ஆக்கிரமித்துள்ள ரியூஷன் வகுப்புகள்!

by sachintha
September 5, 2023 3:08 pm 0 comment

இரவுபகலாக தனியார் வகுப்புகள்; இலவசக்கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக பெற்றோர் ஆதங்கம்!

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் ரியூஷன் கல்வி தீவிரமாக வளர்ச்சியடைந்துள்ளது. தனியார் கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு வழங்கும் சேவைகள் தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதில்லை என்ற குறைபாடு நீண்ட காலமாக பெற்றோர் மத்தியிலுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.முகம்மட் அன்ஸார் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பில் நல்ல தீர்மானங்களை நிறைவேற்றி மக்களுக்கு அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள். கல்வியியலாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து முக்கிய பல தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

சில தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளேனும் இல்லை. பதிவுக் கட்டணம், மணித்தியாலக் கட்டணம், மாதாந்தக் கட்டணம், ரியுட் கட்டணம் என்பவற்றுக்கு தற்போது அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் தனியார் கல்வி நிலையங்கள், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதில்லையென பெற்றோர் சுட்டிக் காட்டுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் அதிகமான பிரதேசங்களில் மணல்தரையில் அமைக்கப்பட்ட, உயரம் குறைந்த தகரக் கொட்டில்களில் மாணவர்கள் அமர்த்தப்படுகின்றனர். அதிகமான தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கான குடிநீர், மலசலகூட வசதிகளில்லை.

மாணவர்களின் நலனில் அக்கறையின்றி, இலாபத்தை மாத்திரம் பிரதான இலக்காகக் கொண்டு தொழிற்படும் இவ்வாறான தனியார் கல்வி நிலையங்களை உள்ளூராட்சி சபைகளோ, பிரதேச செயலகங்களோ, அல்லது பிரதேச அபிவிருத்தியை இலக்காகக் கொண்டியங்கும் பொதுஅமைப்புக்களோ கண்காணிப்பதில்லையென்று பெற்றோர் குறை கூறுகின்றனர்.

அரசாங்க பாடசாலைகளில் போதுமானளவு ஆசிரிய ஆளணியினர் உள்ளனர். ஆனால், தரம் 01 முதல் க.பொ.த உயர்தரம் வரையான வகுப்புக்களில் கல்விகற்கும் மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அதிகமான பிரதேசங்களில் பாடசாலையில் கற்பிப்பவர்களே பிரத்தியேக வகுப்புக்களிலும் கற்பிக்கும் அவலமும் காணப்படுகின்றது.இந்நிலையில் இலவசக் கல்வியினால் பயன் கிடையாதா என்று பெற்றோர் வினவுகின்றனர். இலவசக் கல்வி கேள்விக்குறியாகி விட்டதாக பெற்றோர் ஆதங்கப்படுகின்றனர்.

பாடசாலைகளில் பாடப்பரப்புக்களை நிறைவுசெய்ய முடியாத ஆசிரியர்கள், ரியூசன் கல்வியில் அதிக ஈடுபாடு காட்டி பணமீட்டி வருகின்றனர். ரியூட்டரிகளில் தற்போது மாதாந்தக் கட்டண முறைமை ஒழிந்து, நாளாந்தம், மணித்தியாலம் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக ரியூட் வியாபாரம் வேறாக களைகட்டியுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ள பயிற்சிப் புத்தகங்களையே, சிலர் சிறிது மாற்றங்களைச் செய்து விற்பனை செய்து வருகின்றனர். மாணவர்களின் அன்றாட வீட்டுப் பயிற்சி, சமயக் கல்வி, விளையாட்டு, ஓய்வு என்பனவற்றுக்குப் பங்கமேற்படாத வகையில் கடந்த காலங்களில் பிரத்தியேக வகுப்புக்கள் நேர முகாமைத்துவத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. ஆனால், தற்காலத்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் மாணவர்கள், உணவு உட்கொள்வதற்கேனும் நேரமின்றி அவதியுறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

பிரத்தியேக வகுப்புக்களில் கலந்து கொள்வதைத் தவிர வேறெதற்கும் தற்காலத்தில் மாணவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. மாலை இருள்சூழ்ந்தும் கூட பிரத்தியேக வகுப்புக்கள் நிறைவு பெறுவதில்லை. சில வீடுகளில் நடைபெறும் விஷேட பிரத்தியேக வகுப்புக்கள் இரவு 10 மணிவரை நடைபெறுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மாணவர்கள் வீட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கேற்ற வகையில் அவர்களுக்கு நேரம் வழங்கப்படுவதுமில்லை. சமயக்கல்வி, விளையாட்டு, ஓய்வு என நாட்களைக் கழிப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்புக் கிடைப்பதுமில்லை. இவ்வாறான நிலையை ஏற்படுத்தியவர்கள் ரியூஷன் கல்வி நிலையத்தினர் என்று கூறலாம். இவ்வாறான நிகழ்வுகளினால், பெற்றோர் பெரிதும் மனம் நொந்துபோயுள்ளனர். இவற்றுக்குத் தீர்வை வேண்டி நிற்கின்றனர்.

–முகம்மட் றிஸான்…

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT