Home » மறுமை வாழ்வின் சிந்தனை

மறுமை வாழ்வின் சிந்தனை

by sachintha
September 1, 2023 11:38 am 0 comment

 

மறுமை சிந்தனையை வளர்த்துக்கொள்ள இரு வகையான வழிகள் உள்ளன. ஒன்று சிந்தனை ரீதியான வழிமுறை. மற்றையது செயல் ரீதியான வழிமுறை ஆகும்.

அந்த வகையில் குர்ஆனை பொருள் அறிந்து படிக்கும் போது சிறுகச் சிறுக மறுமை வாழ்வு மீது உறுதியான நம்பிக்கை ஏற்படும்.

ஒருவர் தம் கண்களால் நேரடியாகப் பார்த்துவிட்டு வந்து தெளிவாக விவரிப்பது போல் குர்ஆன் அளிக்கும் மறுமை பற்றிய விவரங்கள் அமைந்துள்ளன. எந்த வார்த்தைகளைக் கொண்டு மறுமை வர்ணிக்கப்படுகின்றதோ அக்காட்சியை நாம் அப்படியே பார்க்கத்தான் போகிறோம் என்பதை குர்ஆனை பொருள் அறிந்து தொடர்ந்து ஓதும்போது விளங்கிக் கொள்ளலாம்.

இந்த மனநிலைக்கு மேலும் உரமூட்ட நபி மொழிகளையும் தேடி ஆழ்ந்து படிக்க வேண்டும். இதன் மூலம் நபி (ஸல்) அவர்களும் தம் தோழர்களும் எந்தளவு மறுமை நம்பிக்கையில் உறுதியுடன் இருந்தார்கள் என்பதையும் அறியலாம்.

‘உங்கள் உள்ளத்தில் மரணம் பற்றிய நினைவு பசுமையாக இருக்க வேண்டும். ஏமாற்றம் உலக வாழ்வில் மூழ்கி மனிதன் பின்வரும் பேருண்மையை மறந்து விடக்கூடாது. எல்லோரும் எந்த இடத்திற்குச் சென்றுவிட்டார்களோ அந்த இடத்திற்கு (மண்ணறைக்கு) நானும் ஒரு நாள் சென்றே தீரவேண்டும்’ என்ற ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள்.

நீங்கள் இவ்வுலக குடும்ப வாழ்வில் உங்கள் பகுதி மக்களுடனும் உறவினர்களுடனும் தொடர்பு கொள்ளும் போதும், கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் போதும் வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் இரண்டு பாதைகள் உங்களை எதிர்நோக்கும்.

முதற்பாதை மறுமை நம்பிக்கையிலும் தேட்டத்தை நிறைவு செய்யும். அடுத்த பாதை உலகாயத் தேட்டத்தை நிறைவு செய்யும். இவற்றில் உங்களின் கால்கள் முதல் பாதையிலேயே செல்ல முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் உள்ளத்தின் பலவீனத்தால் அல்லது அலட்சியம் காரணமாக நீங்கள் இரண்டாவது பாதையில் செல்லத் தொடங்கியிருந்தால், அந்தத் தவறை உணர்ந்த உடனேயே அதிலிருந்து திரும்ப முயலுங்கள். அப்பாதையில் நீங்கள் எவ்வளவு தூரம் சென்றுவிட்டிருந்தாலும் சரியே. அடுத்து அடிக்கடி உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள், உங்கள் கணக்குகளை நீங்களே எண்ணிப் பாருங்கள். எத்தனை சந்தர்ப்பங்களில் உலகம் தன்பால் உங்களை ஈர்ப்பதில் வெற்றி கண்டிருக்கிறது. அதேபோல் எத்தனை சந்தர்ப்பங்களில் மறுமையின் பக்கம் செல்வதில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்பதை நீங்கள் ஆய்வு செய்த வண்ணம் இருங்கள்.

உங்களிடம் மறுமை சிந்தனை எந்த அளவுக்கு இருக்கிறது, அது வளர்கின்றதா? தேய்கிறதா? அதில் எந்த அளவுக்கு குறைபாடு இருக்கிறது போன்ற விபரங்களை அம் மதிப்பீடு துல்லியமாகக் காண்பித்து விடும்.

தொகுப்பு: ஜத்து ஹன்ழலா…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT