Monday, May 20, 2024
Home » துன்பத்துக்கு உள்ளானவருக்கு ஆறுதல் கூறுவதன் சிறப்பு

துன்பத்துக்கு உள்ளானவருக்கு ஆறுதல் கூறுவதன் சிறப்பு

by Gayan Abeykoon
May 10, 2024 9:35 am 0 comment

ரு தடவை நபி (ஸல்) அவர்கள், துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பப்பட்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்றே ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்’ என்று கூறினார்கள்.

(ஆதாரம்: திர்மிதி).

இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. இதுகுறித்து அல் குர்ஆன், ‘நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது’. (94:5) என்று குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக வாழ்நாள் முழுவதும் எவரும் இன்பமாகவே வாழ்ந்தார் என்ற வரலாறு கிடையாது. அதேபோன்று எவரும் ஆயுள் முழுவதும் துன்பமாகவே வாழ்ந்தார் என்றும் இல்லை. ஒரு புத்தகத்தைப் போன்றது தான் மனித வாழ்க்கை. ஒரு பக்கம் துன்பமும், மறுபக்கம் இன்பமும் நிறைந்ததாக இருக்கும். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று மனித வாழ்வும் இன்பமும் – துன்பமும் கொண்டதாகவே விளங்குகிறது.

என்றாலும் மறுமை வாழ்வின் பின்னர் சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந்த பின்னர் பொது அறிவிப்பாளர் ஒருவர், ‘இனி நீங்கள் இன்பத்துடன் தான் இருப்பீர்கள். ஒருபோதும் துன்பம் அடைய மாட்டீர்கள்’ என்று அறிவிப்புச் செய்வார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (ஆதாரம்: புஹாரி)

துன்பம் என்பது ஒருவகை வலியினால் ஏற்படும் சோகமான ஒரு உணர்வலை. அது தோல்வியால் வரலாம். நஷ்டத்தால் ஏற்படலாம். விருப்பமானதை இழப்பதினால் கூட நடக்கலாம்.

துன்பத்தை சந்திக்கும் ஒருவர் சகஜமான நிலைக்கு அப்பாற்பட்டு யாரிடமும் பேசாமல் மௌனமாகி விடுவார். தனிமையை விரும்புவார். மனஅழுத்தம் ஏற்பட்டு இளைப்பாற ஓய்வெடுப்பார். அடக்கமுடியாமல் அழுவார். இவருக்கு அப்போது தேவை மன ஆறுதலான நான்கு வார்த்தைகள் தான்.

துன்பத்தில் ஆறுதல் கூறும் அழகிய வார்த்தை என்பது வலி நிவாரணி போன்றது. வலிகள் இருந்தாலும் இந்த வார்த்தையால் மூளை வலியை உணராமல் செய்து விடும். நீ துன்பத்தில் தவிக்கும்போது ஆறுதல் கூறுபவர் நீ விரும்பும் நபராக இருக்கமாட்டார். உன்னை விரும்பும் நபராக இருப்பார். துன்பத்தில் கூறப்படும் அழகிய ஆறுதல் வரிகள் உள்ளன.

‘இறைவன் உமக்கு மகத்தான சன்மானம் வழங்கட்டுமாக…! அவன் அழகிய ஆறுதலை அளிக்கட்டுமாக…! மரணித்தவருக்கு மன்னிப்பை வழங்குவானாக…!’ – இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய அழகிய ஆறுதல் வரிகளாகும்.

இறைவன் உமக்கு கருணை பொழியட்டும்…! துன்பத்திலிருந்து உம்மை விடுவிக்கட்டும்..! உமது துன்பத்தை அகற்றிவிடட்டும்..! என்பது போன்ற வார்த்தைகளையும் கூட ஆறுதல் வார்த்தைகளாகப் பயன்படுத்தலாம்.

நபித் தோழரான உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள், ஒரு தடவை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களுடைய புதல்வியரில் ஒருவருடைய (ஸைனப் (ரழி) அவர்களுடைய) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தருவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘நீ ஸைனபிடம் சென்று, ‘அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே..! அவன் கொடுத்ததும் அவனுக்குரியதுதான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. ஆகவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச்சொல்..’ என்று கூறி அனுப்பி வைத்தார்கள். (நூல்: புஹாரி)

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘ஒரு இறைநம்பிக்கையாளர் துன்பத்தில் சிக்கிய தமது சகோதரருக்குப் பொறுமையும், ஆறுதலும் கூறி அவரைத் தேற்றினால், அவருக்கு மறுமைநாளில் இறைவன் சங்கை எனும் ஆடையை அணிவிப்பான்’ எனக் கூறியுள்ளார்கள்’. (ஆதாரம்: இப்னு மாஜா)

துன்பத்தில் சிக்குண்டவரை சாதி, மத, இன, நிற, மொழி, தேசியம் பாராமல் அவருக்கு ஆறுதல் கூறுவது நபியின் வழிமுறையாகும். நபி (ஸல்) அவர்கள், நோய்வாய்ப்பட்டு மரண தருவாயில் இருக்கும் ஒரு யூத சிறுவனின் வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறிவிட்டு வந்த நிகழ்வு நெகிழ்ச்சியைத் தருகிறது.ஆகவே துன்பத்தில் உள்ளவர்களுக்கு இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு அமைய அழகிய வார்த்தைகளால் ஆறுதல் கூறுவோம்.

அப்துல்லாஹ் 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT