Friday, May 10, 2024
Home » அரசாங்கத்திலோ, அரசியல்வாதிகளிலோ தங்கியிராத சுற்றுலாக் கொள்கை விரைவில்

அரசாங்கத்திலோ, அரசியல்வாதிகளிலோ தங்கியிராத சுற்றுலாக் கொள்கை விரைவில்

- சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம்

by Rizwan Segu Mohideen
August 14, 2023 7:56 pm 0 comment

– சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வெகுவாக அதிகரிப்பு

அரசாங்கம் அல்லது அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார்.

துறைசார் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்ட குறித்த கொள்கை வரைவை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டுக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் ஹரீன் பெனாண்டோ இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஹரீன் பெனாண்டோ,

கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறை, தற்போது முன்னேற்றமடைந்து வருவதாகவும், ஆனாலும் நாம் எதிர்பார்த்துள்ள இலக்கை இன்னும் அடையவில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர், படிப்படியாக நாம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு நம் நாட்டில் உள்ள ஹோட்டல் அறைகள் போதுமானதாக இல்லை. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது நாடு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஸ்திர நிலையை அடைந்து வருவதால் எமது நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Tourist arrivals as at 10 -08-2023

எனவே நாம் அவர்களுக்குப் பொருத்தமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்குப் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தமது சொந்தக் கட்டிடங்களை சுற்றுலா விடுதிகளாக பயன்படுத்த விருப்பமுள்ள கட்டிட உரிமையாளர்கள் சுற்றுலா சபையில் பதிவு செய்து கொள்ளுமாறும், அதன் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டுவதுடன் நாட்டின் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்கும் உதவ முடியும் என்றும் தெரிவித்தார்.

புதிய சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கும் வகையில் நாட்டின் அழகிய இடங்கள் குறித்த குறும்பட விழாவொன்றை நடத்தவுள்ளதாகவும், இந்த நாட்டில் உள்ள எவரும் இதில் பங்கேற்கலாம் என்றும் குறிப்பிட்ட அமைச்சர். சிறந்த குறும்படத்திற்கு பரிசில்களை வழங்கவும் அவர்களின் எதிர்காலப் பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கான பயிற்சிகளை வழங்கவும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், சுற்றுலாத் துறைக்கான புதிய கொள்கை ஒன்றை வகுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது நடைமுறைக்கு வருமிடத்து, நாட்டில் அமைச்சர்கள் மாறினாலும், எப்போதும் மாறாத நிலையான சுற்றுலாக் கொள்கையுடைய சுற்றுலா வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பல்வேறு தரத்தினைக்கொண்ட ஹில்டன் ஹோட்டல் வலையமைப்பின் அதிகூடிய தரத்தைக் கொண்ட ஹில்டன் ஹோட்டல் ஒன்றை யால பிரதேசத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் திறக்கவுள்ளதாகவும், அதனுடன் இணைந்த வகையில் சுற்றுலாப் பிரச்சார வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தை நோக்கமாகக்கொண்டு ஹோட்டல் பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் பல்வேறு துறைசார் பயிற்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் மூலம் அவர்கள் இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

எமது நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலங்களில் தற்போதுள்ள சன நெரிசலைத் தவிர்க்க பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், குறித்த ஒரு சில சுற்றுலாத் தலங்கள் தொடர்பாகவே அதிகளவானோர் தெரிந்து வைத்திருப்பதாகவும், அவை தவிர சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய இடங்கள் எமது நாட்டில் அதிகளவில் உள்ளதாகவும், அவை பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியப்படுத்தக் கூடிய விளம்பர ரீதியிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து சுற்றுலாத் துறைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் மோசடிகள் போன்ற கசப்பான அனுபவங்கைளைத் தடுக்க புதிய கண்காணிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சுற்றுலா செயலி ஒன்றை உருவாக்கும் பணிகள் நடந்து வருதாகவும், குறித்த செயலி, பயன்பாட்டுக்கு வந்தவுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான இடையூறுகள், குறிப்பாக நிதி மோசடிகள் இதன் மூலம் தடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குதல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் பணியை பல்வேறு அரச நிறுவனங்கள் தனித்தனியாக முன்னெடுப்பதன் ஊடாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும், தற்போது ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, அது தொடர்பில் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய வகையில் காணி தொடர்பிலான புதிய கொள்கையொன்றை வகுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT