அமெரிக்கா - இலங்கை இராஜ தந்திர உறவுக்கு 75 வருடங்கள்; விக்டோரியா நூலண்ட் இலங்கை

- இலங்கையில் இடம்பெறும் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா உதவும்
- ஜனாதிபதியுடனான சந்திப்பில் உறுதியளிப்பு; ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கையை வந்துள்ளார்.

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் விக்டோரியா நூலன்ட் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்த அவர், இலங்கையின் தற்போதைய மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு அமெரிக்க அரசு ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளார்.

இக்கடினமான காலத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவிற்கு ஜனாதிபதி அவரிடம் நன்றி தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க - இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75ஆவது வருட நிறைவைக் குறிக்கும் வகையில் அவர் இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குமான இலங்கையின் தற்போதைய மறுசீரமைப்பு தொடர்பில் அமெரிக்காவின் ஆதரவை அவரது விஜயம் எடுத்துக்காட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

ஜனாதிபதியுடனான குறித்த கலந்துரையாடலின் போது, பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, அவருடன் இக்கலந்துரையாடலில் பங்குபற்றி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அமெரிக்கா இலங்கைக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் 240 மில்லியன் டொலர் உதவிகளை வழங்கியதாக தெரிவித்துள்ள ஜூலி சங், அனைத்து இலங்கையர்களும் உள்ளீர்க்கப்பட்ட, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், எழுந்துள்ள பிரச்சினைகளுக்கான அவசரத் தீர்வுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என விக்டோரியா  நூலாண்ட் சுட்டிக்காட்டினார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை  அமுல்படுத்துவது உட்பட அது தொடர்பில்   சிறிய கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்து  ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

அதிகரித்து வரும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு  எதிராக தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டன, அமெரிக்கா அதற்கு தனது முழு ஆதரவையும் வழங்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர்  தினுக் கொழம்பகே, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்   ஜூலி சங் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...