திலிணி பிரியமாலியின் மோசடி; மற்றுமொரு பெண் வர்த்தகர் கைது

நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலிணி பிரியமாலியின் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படும் ஜானகி சிறிவர்தன எனும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல வர்த்தகரான ஜானகி சிறிவர்தன, இன்று (04) முற்பகல் கொழும்பு, கோட்டை, கிறிஸ் சதுக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  (CID) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல பில்லியன் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள Thico Group of Companies நிறுவனத்தின் உரிமையாளரான திலிணி பிரியமாலிக்கு எதிரான வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜானகி சிறிவர்தன, கிறிஸ் குழுமத்தின் One Transworks Square நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் பணிப்பாளருமாரும் ஆவார். குறித்த நிறுவனம் கொழும்பு கோட்டையிலுள்ள ‘The One’ எனப்படும் மூன்று கோபுரங்களைக் கொண்ட கலப்பு பயன்பாட்டு கட்டட திட்டத்தின், சொத்து மேம்பாட்டு நிறுவனமாகும்.

தொழிலதிபர்கள் மற்றும் உயர் அரசியல் பிரமுகர்களுடன் நட்பாகப் பழகி, தனது தொழிலில் முதலீடு செய்வதில் அதிக வருமானம் தருவதாகக் கூறி, மோசடி செய்த குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் திலிணி பிரியமாலி சிஐடியினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...