சல்மான் ருஷ்டி மீது கூரிய ஆயுத தாக்குதல்

- கண்ணை இழக்கும் நிலையில் வைத்தியசாலையில் போராடி வருகிறார்
- தனது பாதுகாப்பு தொடர்பில் தஸ்லிமா நஸ்ரின் அச்சம் வெளியீடு

நேற்று (12) நியூயோக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து சல்மான் ருஷ்டி மீது கத்திக் குத்து தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் அவர் தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

1988ஆம் ஆண்டு 'ஷாத்தானின் வசனங்கள்' (Satanic Verses) எனும் நூலை வெளியிட்டதைத் தொடர்ந்து, உலக முஸ்லிம்களின் வெறுப்பை கட்டிக்கொண்ட இறைமறுப்பு எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு, கொலை அச்சுறுத்தல் இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்த்தக்கது.

75 வயதான சல்மான் ருஷ்தி மீது 24 வயதான ஹாதி மாதர் (Hadi Matar) எனும் இளைஞன் ஒருவனே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலத்தின் பெயார்வியூ எனும் இடத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதில் கழுத்திலும், அடிவயிற்றுலும் தாக்குதலுக்குள்ளான சல்மான் ருஷ்டி அங்கிருந்து உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் பென்சில்வேனியாவிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

ஆபத்தான நிலையில் உள்ள சல்மான் ருஷ்டி ஒரு கண்ணை இழக்கக்கூடும் என அவரது மருத்துவர் தெரிவித்துள்ளனர்.  அவரது கையிலுள்ள நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, அவரது ஈரலும் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரிடமிரந்து மீட்கப்பட்ட முதுகுப்பை மற்றும் இலத்திரனியல் சாதனங்களை ஆய்வு செய்வதற்கான உத்தரவை பெறும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான நோக்கமோ அல்லது குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது, ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தாக்கிய நபரை விரைந்து வந்து தரையில் அழுத்திப் பிடித்ததாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும், பார்வையாளர்களில் ஒரு மருத்துவர் ருஷ்டிக்கு முதலுதவி செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ருஷ்டியுடன் இருந்து நேர்காணல் மேற்கொண்ட ஹென்றி ரீஸ் (Henry Reese) என்பவரின் தலையில் சிறிய காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹென்றி ரீஸ் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பின் இணை நிறுவுனர் என்பதோடு, இவ்வமைப்பு துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலின் கீழ் நாடுகடத்தப்பட்ட எழுத்தாளர்களுக்கான புகலிடத்தை வழங்குகிறது.

ருஷ்டி மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் அவரைத் தொடர்ச்சியாக பல முறை தாக்கியதாகவும், அவர் இறுதி வரை தனது தாக்குதலை நிறுத்தவில்லையெனவும் லிண்டா ஆப்ரம்ஸ் எனும் பார்வையாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவரை அடக்க ஐந்து பேர் முயள்சி செய்தனர், அவர் தொடர்ந்தும் ருஷ்டி மீது குத்திக்கொண்டே இருந்தாரென, லிண்டா ஆப்ரம்ஸ் தெரிவித்துள்ளார். அவர் ஆத்திரத்துடன் காணப்பட்டிருந்தார். மிக  வலிமையாகவும் வேகமாகவும் இருந்தார். என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மும்பாயில் பிறந்த சல்மான் ருஷ்டிக்கு தற்போது 75 வயதாகும். இவருக்கு 3 மனைவிகளும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

1981 இல் Midnight's Children எனும் நூலின் மூலம் இவர் புகழ் பெற்றார். இதன் ஒரு மில்லியன் பிரதிகள்  இங்கிலாந்தில் மாத்திரம் விற்பனையாகியுள்ளது.

1988 இல் வெளியிடப்பட்ட அவரது நான்காவது புத்தகமான - The Satanic Verses (சாத்தானிக் வசனங்கள்) அவரை சுமார் 10 வருடங்கள் தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது.

முஸ்லிம்கள் மத்தியில் இது சீற்றத்தைத் தூண்டியதோடு, குறித்த நூலின் உள்ளடக்கம் மதத்தையும் கடவுளையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சில நாடுகளில் இப்புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ருஷ்டிக்கு எதிரான கலவரங்களில் பலர் கொல்லப்பட்டதோடு ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கும் கல்லெறியப்பட்டது.

1991 ஆம் ஆண்டில், புத்தகத்தின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் கத்தியால் குத்தப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, இத்தாலிய மொழிபெயர்ப்பாளரும் கத்தியால் குத்தப்பட்டார். புத்தகத்தின் நோர்வே வெளியீட்டாளர் வில்லியம் நைகார்ட் சுடப்பட்டார் ஆனால் குறித்த இருவரும் உயிர் பிழைத்தனர்.

புத்தகம் வெளியாகி ஒரு வருடம் கழித்து, ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா கொமேனி, சல்மான் ருஷ்டியை தூக்கிலிட அழைப்பு விடுத்தார். $3m (£2.5m) வெகுமதியை இதற்காக வழங்குவதாகவும் அறிவித்தார்.

ருஷ்டியின் மீதான குறித்த பரிசு தொடர்ந்தும் அமுலில் உள்ளது என்பதுடன், ஈரான் அரசாங்கம் கொமேனியின் ஆணையிலிருந்து விலகியிருந்தாலும், ஒரு காசி-உத்தியோகபூர்வ ஈரானிய மத அறக்கட்டளை 2012 இல் அவ்வெகுமதியை மேலும் $500,000 ஆக அதிகரித்தது.

சல்மான் ருஷ்டி மீதான கத்திக்குத்து பற்றி ஈரான் அரசிடம் இருந்து எந்தவொரு பதிலும் வெளியிடப்படவில்லை. ஈரானிய ஊடகங்கள் சல்மான் ருஷ்டியை ஒரு விசுவாச துரோகி என்று வர்ணித்துள்ளன.

பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்ற சல்மான் ருஷ்டி, நடைமுறையில் இஸ்லாத்தை பின்பற்றாத முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தவர் என்பதோடு அவர் ஒரு நாத்திகரும் ஆவார். கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவராக தன்னை அடையாளப்படுத்திய அவர், தனது செயற்பாடுகளை சரியென வலியுறுத்தி வந்துள்ளார்.

தி சாத்தானிக் வெர்சஸ் வெளியானதில் இருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் ருஷ்டி மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளார். ருஷ்டி தனது நாவலின் முக்கிய உந்துதல் புலம்பெயர்ந்த அனுபவத்தை ஆராய்வதாக கூறினார், ஆனால் முஸ்லிம்களில் பலர் முஹம்மது நபியின் சித்தரிப்பு மற்றும் குர்ஆன் கடவுளின் வார்த்தையாக வெளிப்படுத்தப்பட்டதன் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக கவலையுற்றனர்.

சாத்தானிய வசனங்கள் முதலில் அவரது பிறந்த நாடான இந்தியாவிலும் பின்னர் ஈரானின் ஆயயதுல்லா கொமேனி தனது அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பும் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டன.

இந்த புத்தகத்தை வெளியிடுவதில் சம்பந்தப்பட்டவர்களைக் கொல்ல வேண்டும் என்றும், கொலைகளில் பங்கேற்பவர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதாகவும் கொமேனி அறிவித்திருந்தார்.

போராட்டங்களின் பரவலை கண்டு அஞ்சிய சல்மான் ருஷ்டி முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டதோடு, அதனைத் தொடர்ந்து தலைமறைவானார்.

2007 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டிக்கு ராணியால் நைட் (Knight) பட்டம் வழங்கப்பட்டபோது, ​​அது ஈரான் மற்றும் பாகிஸ்தானில் எதிர்ப்புகளைத் தூண்டியது, அங்கு ஒரு அமைச்சரவை அமைச்சர்  "தற்கொலைத் தாக்குதல்களை இது நியாயப்படுத்துகிறது" என்று கூறினார்.

ருஷ்டி கலந்து கொண்ட பல இலக்கிய நிகழ்வுகள் அச்சுறுத்தல்கள் மற்றும் பகிஷ்கரிப்புகளுக்கு உட்பட்டுள்ளன. ஆனால் அவர் தொடர்ந்தும் எழுதி வருகிறார். அவரது அடுத்த நாவலான Victory Cityஎதிர்வரும் பெப்ரவரி 2023 இல் வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை, தனது லஜ்ஜா நாவல் மூலம் முஸ்லிம்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்தியதாக நீதிமன்றம் கூறியதையடுத்து, வங்காளதேசத்தில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன், ருஷ்டியின் தாக்குதலுக்குப் பின்னர் தனது சொந்தப் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாகக் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...