அருகிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு

- போக்குவரத்து சிரமங்கள் கருதி இவ்வருட இறுதிவரை கல்வி அமைச்சு சலுகை

தற்போதுள்ள போக்குவரத்து சிரமங்கள் காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகைகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, குறிப்பிட்ட  சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆசிரியர்களால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய, அவர்களுக்கு வசதியான பாடசாலைகளுக்கு தற்காலிக நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு சம்பந்தப்பட்ட இரு பாடசாலைகளின் அதிபர்களின் எழுத்து மூல அனுமதியின் அடிப்படையின் கீழ் மாத்திரம் குறித்த நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த நியமனங்கள் இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரை மாத்திரம் செல்லுபடியாகுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு பின்வரும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

  1. ஒரே மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு இடையில் மற்றும் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்களை இணைப்பதற்கான அதிகாரம் உரிய மாகாண கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்படும்.
  2. மாகாணங்கள் இரண்டிற்கு இடையே மாகாண சபை பாடசாலைகளின் ஆசிரியர்களை இணைப்பதற்கு, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் அனுமதியின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  3. மாகாணங்களுக்கிடையிலான தேசிய பாடசாலைகளில் இணைத்தல், கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்படும்.
  4. கோரிக்கை விடுக்கும் ஆசிரியர், உரிய பாடசாலையில் மிகை எண்ணிக்கையில் உள்ளவராயின், அவர் சார்பாக ஒரு ஆசிரியரை அப்பாடசாலைக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை.
  5. கோரிக்கை விடுக்கும் ஆசிரியர், பாடசாலையின் மிகை எண்ணிக்கையில் இல்லாவிட்டால், உரிய பதில் ஆசிரியரை வழங்கிய பின் இணைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
  6. அதிபர்களின் அனுமதியுடன் சுமுகமான இடமாற்றங்கள் செய்யப்படுவதைப் போன்ற, அதே அடிப்படையில் இவ்வாறு இணைக்கப்படும் நியமனங்களும் கருதப்பட வேண்டும்.
  7. கர்ப்பிணி மற்றும் மருத்துவ பரிந்துரைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் இணைப்புகள், குறித்த மருத்துவ ரீதியான காரணங்கள் அடங்கிய சான்றிதழ்களின் உறுதிப்படுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். (2007/20 சுற்றறிக்கையின் 3.4.ii இன் படி)
  8. தேசிய பாடசாலைகள் தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்படும் இணைப்புக் கடிதங்களின் பிரதிகள் கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றங்கள் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.

இது தொடர்பில் அனைத்து மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுக்கள் மற்றும் செயலாளர்கள், அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள், அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் நிலவும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு, ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதும், மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதும் இந்த செயற்பாட்டின் நோக்கமாகும் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, இது குறித்த பாடசாலைக்கான இடமாற்றத்தை பெறுவதற்கான உரித்துடைமை அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...