1 3⁄4 மணி நேர மின்வெட்டுக்கு வாய்ப்பு

1 3⁄4 மணி நேர மின்வெட்டுக்கு வாய்ப்பு-Power Cut-Sri Lanka Map

- மின்வெட்டு வரைபடம்: cebcare.ceb.lk/Incognito/OutageMap

இன்றையதினம் (19) 1 மணித்தியாலம் 45 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் (CEBEU) அறிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இச்சங்கத்தின் பிரதிநிதிகள் நாட்டை 4 வலயங்களாக பிரித்து, மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்சாரம் தடைப்படுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மின் விநியோக கட்டமைப்பை சமநிலைப்படுத்தும் நோக்கில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக, சங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.

நிலைமை வழமைக்கு வரும் வரை மின்வெட்டு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் இடங்கள் மற்றும் தினங்களை cebcare.ceb.lk/Incognito/OutageMap எனும் இ.மி.ச. இணையத்தில் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் பற்றாக்குறையால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அதற்கான எரிபொருள் தற்போது வரைர விடுவிக்கப்படாத நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குத் தேவையான எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயினும் கொழும்பு துறைமுகத்திற்கு 37,500 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் வந்துள்ள  கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 10,000 மெட்ரிக் தொன் எரிபொருள் மின்சார சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில் இன்று தெரிவித்திருந்தார்.

நேற்றைய (18) அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19)  இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...