சென்னையில் திடீரென இடிந்து வீழ்ந்த தொடர்மாடிக் குடியிருப்பு

- 24 வீடுகள் முற்றாக சேதம்

சென்னை, திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரியத்துக்குச் சொந்தமான 4 மாடி கொண்ட குடியிருப்பொன்று, நேற்று (27) காலை 11:00 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது. 

22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் நேற்று காலை லேசாக விரிசல் விழுந்துள்ளது. அதைப்பார்த்த மக்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கிய வேளையில் எதிர்பாராத விதமாக கட்டடம் மொத்தமாக நொறுங்கி விழுந்தது. இந்த கட்டடத்தில் வசித்து வந்த மக்கள் அனைவரும் வெளியேறியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதிலிருந்த 24 வீடுகளும் தரைமட்டமாகியுள்ளன. 100ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அரிவாக்குளம் பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில் குடிசைமாற்று வாரியம் சார்பில் 14 பிளாக்குகள் கொண்ட 336 குடியிருப்புகள் கட்டப்பட்டது. ஒரு பிளாக்கில் 24 வீடுகள் உள்ளது. இந்தக் குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து பல முறை குடியிருப்பு வாசிகள் குடிசைமாற்று வாரிய அதிகாரிகளுக்கும், அதிமுக அமைச்சர்களிடமும் மனு கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குடியிருப்பில் மீதமுள்ள 13 பிளாக்குகளின் கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்தும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள கட்டடங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பு கருதி அதிகாரிகள் கட்டிடத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

மேலும், கட்டடத்தில் வசித்து வந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த நபர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி வழங்கப்பட்டு, அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு மாற்று வீடுகளும், 24 குடும்பங்களுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களை சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


Add new comment

Or log in with...