தடுப்பூசி பெற்று நாடு திரும்பும் இலங்கையர் ஹோட்டல்களில் தங்க வேண்டியதில்லை

தடுப்பூசி பெற்று நாடு திரும்பும் இலங்கையர் ஹோட்டல்களில் தங்க வேண்டியதில்லை-Double Vaccinated Returning Sri Lankan Citizens No Need to Stay at a Hotel for PCR Test

- எதிர்வரும் வாரம் முதல் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை
- விரைவில் சுற்றுநிருபம்

இரு தடுப்பூசிகளையும் பெற்று வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அவசியமில்லையென முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இரு தடுப்பூசிகளையும் பெற்று நாடு திரும்புவோர், தங்களுக்கு மேற்கொள்ளும் PCR பரிசோதனை முடிவுகள் வரும்வரை, கொழும்பிலிருந்து மற்றுமொரு பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, 24 மணித்தியாலங்கள் ஹோட்டல்களில் தங்க வைப்படுவதனால் ஏற்படும் நேர விரயம் மற்றும் ஹோட்டல்களில் அறவிடப்படும் அதிக கட்டணம், அக்கடணத்திற்கு ஏற்ற வசதிகள் வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், தாங்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களை நாடு திரும்பியோர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள PCR சோதனைகளை, சுகாதார அமைச்சு மேற்கொண்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் பயணிகள் வீட்டுக்கு அல்லது தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக்க, சுகாதார சேவகைள் பணிப்பாளர் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் ஆகியோருடன் இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.