Home » கிழக்கில் கலாசார நிகழ்வுகள் ஊடாக இன நல்லிணக்கத்தை உருவாக்குவோம்!

கிழக்கில் கலாசார நிகழ்வுகள் ஊடாக இன நல்லிணக்கத்தை உருவாக்குவோம்!

by damith
January 9, 2024 6:00 am 0 comment

கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கட்டி எழுப்பும் வகையில் அங்கு வாழ்கின்ற ஒவ்வொரு சமூகத்தினரும் கலாசார நிகழ்வுகளை கொண்டாடுவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். அதனடிப்படையில் தமிழர்களின் முதன்மைப் பண்டிகையான தைப்பொங்கலினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெற்று வருவதுடன் இவ்வாறான கலாசார நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

திருகோணமலை எம்.சி. ஹைசர் அரங்கில் நடைபெற்ற மாபெரும் தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நிச்சயமாக ஏனைய சமூகங்களினது பண்டிகைகள் வருகின்ற பொழுது அவர்களின் கலாசாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அதன் மூலம் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை, சமாதானம் போன்றவற்றை மக்களுக்கிடையில் உருவாக்கலாம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணமானது அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற ஒரு மிக முக்கியமான தனித்துவமான மாகாணமாகும். இந்த மாகாணத்தில் பல சமூகத்தினரதும் பண்டிகைகள் வருகின்ற பொழுது அவற்றினை விமரிசையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் தான் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வருடத்தில் மிகப்பிரம்மாண்டமான முறையில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டதுடன் தற்பொழுது தைப்பொங்கல் பண்டிகைக்கான நிகழ்வுகள் இம்மாகாணத்தில் கொண்டாடப்படுகின்றன. நிச்சயமாக எதிர்காலத்தில் வெசாக் பண்டிகை உட்பட ரமழான் பண்டிகைகளும் மிக விமர்சையான முறையில் இந்த மாகாணத்தில் கொண்டாடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வில் பல்வேறு கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் சுமார் 1500 மாணவர்கள் பங்குபற்றிய மிகப் பிரமாண்டமான நடனம் ஒன்றும் நேற்று(08) திருகோணமலை மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான் அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உட்பட ஏனைய நிறுவனத் தலைவர்கள் அனைவருக்கும் அதேபோன்று குறித்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நபர்களுக்கும் தனது உளப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொண்டதுடன் தைப்பொங்கலை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிஈட்டிய போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரள, இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் ஜல்லிக்கட்டு நலன்புரி அமைப்பின் தலைவர் ராஜா, அரசாங்க அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

- ஏ.பி. அப்துல் கபூர் (அம்பாறை மாவட்ட குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT