உலக சுகாதார ஸ்தாபனம், சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார பிரிவின் ஆய்வு அறிக்கையின்படி, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்கேட்டின் பின்னர் பெருந்தோட்ட மக்களிடையே உணவு பாதுகாப்பு மற்றும் போசனை மட்டத்தின் சரிவு அதிகரித்துள்ளது. இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல மாற்று திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
அந்த வகையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் செரண்டிப் கோதுமை மா உற்பத்தி நிறுவனம் ஆகியன இணைந்து சத்தூட்டப்பட்ட கோதுமை மா அறிமுக விழாவை நேற்று (15) நுவரெலியாவில் நடத்தின.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவுக்கமைய, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் இவ்விழா நடைபெற்றது. நார்ச்சத்து, இரும்பு சத்து, போலிக்கமிலம் மற்றும் விட்டமின் பீ12 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய விசேட கோதுமை மா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சந்தையில் உள்ள சாதாரண கோதுமை மாவை விட விலை மலிவாக பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.
பெரும்பான்மையான தொழிலாளர்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் இடையே போஷாக்கு குறைப்பாடும் விசேடமாக எனிமிக் எனும் நோயும் காணப்படுகின்றது. இதற்கு தீர்வு வழங்கும் முகமாகவே முதற்கட்டமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி சர்மா, பெருந்தோட்ட யாக்கங்களின் பிரதம நிறைவேற்றதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட அதன் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர்)