Home » உலகக் கிண்ண அரையிறுதியில் இன்று இந்திய–நியூசிலாந்து அணிகள் களத்தில்

உலகக் கிண்ண அரையிறுதியில் இன்று இந்திய–நியூசிலாந்து அணிகள் களத்தில்

by Gayan Abeykoon
November 15, 2023 6:24 am 0 comment

லகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (15) மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இம்முறை உலகக் கிண்ணத்தின் குழு நிலை போட்டியில் ஒரு தோல்வி கூட இல்லாத நிலையில் முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியதோடு, குழு நிலையின் முதல் நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றியீட்டிய பின்னர் அடுத்தடுத்த தோல்வியை சந்தித்த நிலையில் கடைசி அணியாகவே நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

சொந்த மைதானத்தில், சொந்த ரசிகர்களின் முன் வலுவான அணியாக களமிறங்கும் இந்தியாவை இதுவரை நடந்த போட்டிகளில் எந்த அணியாலும் ஆட்டம் காணச் செய்ய முடியவில்லை. தொடரில் அதிக விக்கெட் (85), சிறந்த பந்துவிச்சு சராசரி (19.6) மற்றும் சிறந்த ஓட்ட வேகம் (26.2) என அனைத்துத் துறைகளிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கொஹ்லி, கே.எல். ராகுல் என துடுப்பாட்ட வரிசை மற்றும் ஜஸ்பிரிட், பூம்ரா, மொஹமட் ஷமி மற்றும் மொஹமட் சிராஜ் முதற்கொண்டு பந்து வீச்சு வரிசையும் வலுவாக உள்ளது.

ரவுண்ட் ரொபின் சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டபோது அந்த அணி போட்டியை 4 விக்கெட்டுகளால் வென்றது. எனினும் தர்மசாலாவில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியால் கடைசி வரை சவால் கொடுக்க முடிந்தது.

இந்தியா அணிக்கு மைதானம், ரசிகர்கள் அனைத்தும் சாதகமாக இருந்தபோதும் அதுவே அந்த அணிக்கு அழுத்தத்தையும் அதிகரிக்கக் காரணமாக அமையக் கூடும். உலகக் கிண்ண நொக் அவுட் போட்டிகளில் இந்திய தடுமாற்றம் காண்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்திய அணி இதுவரை ஆடிய ஏழு அரையிறுதிப் போட்டிகளில் நான்கில் தோற்று மூன்றில் வெற்றியீட்டியுள்ளது.

மறுபுறம் இதுவரை ஒருநாள் உலகக் கிண்ணத்தை வெல்லாத அணியாக இருந்தபோதும் நியூசிலாந்து கடந்த இரு உலகக் கிண்ணங்களிலும் இறுதிப் போட்டிவரை முன்னேறிய அனுபவத்தை பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடன் சேர்ந்து மண்ணில் உலகக் கிண்ணத்தை நடத்திய நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிவரை முன்னேறிய நிலையில் இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கடைசியாக நடந்த உலகக் கிண்ணப் போட்டியிலும் நியூசிலாந்து இறுதிப் போட்டிவரை முன்னேறிய நிலையில் சுப்பர் ஓவர் வரை சென்ற பரபரப்பான அந்த உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து கிண்ணத்தை வெல்லத் தவறியது.

அதேபோன்று கடந்த உலகக் கிண்ணத்திலும் நியூசிலாந்து அணி அரையிறுதியில் இந்திய அணியையே எதிர்கொண்டது. மான்செஸ்டரில் மழை காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த அரையிறுதியில் இந்திய அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த நியூசிலாந்து அணியால் முடிந்தது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் வேகமாக ஓட்டங்களை குவிக்கும் அணியாக உள்ள நியூசிலாந்து தொடரில் அதிக ஓட்ட வேகத்தை (6.5) பெற்ற அணியாகவும் உள்ளது.

இன்றைய போட்டி நடைபெறும் வான்கடே மைதானம், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டுக்கும் உதவுவதாக உள்ளது. கடந்த பத்து போட்டிகளிலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் பெறப்பட்ட சராசரி ஓட்டங்கள் 318 ஆகும். எனினும் இங்கு இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணிகள் 60 வீதமான போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளன.

எனவே, நாணய சுழற்சியில் வெல்லும் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம்.

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் இதுவரை 117 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தி இருப்பதோடு இதில் இந்தியா 59 போட்டிகளிலும் நியூசிலாந்து 50 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் முடிந்ததோடு மற்ற ஏழு ஆட்டங்களிலும் முடிவு கிடைக்கவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT