பயங்கரவாத தடுப்பு சட்டம்; வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் (UPDATE)

மட்டு.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்; இயல்பு பாதிப்பு

(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான், பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ. சக்திவேல்)

பாராளுமன்றத்தில்  கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்து சேவைகளும் பாரியளவில் இடம்பெறவில்லை.

ஹர்த்தால் காரணமாக மாவட்டத்தின் வழமையான அலுவல்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

திருகோணமலையில் தமிழ்,  முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால்!

(தம்பலகாமம் குறூப் நிருபர் - ஏ.எச். ஹஸ்பர்)

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்,  சிங்களமயமாக்கலை எதிர்த்து வடக்கு கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) பூரண ஹர்த்தால் இடம் பெறுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்,  முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடைய பகுதிகளில் சகல துறைகளும் இன்று முடங்கியுள்ளன.

திருகோணமலையில் தமிழ்,  முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், கடைகள் பூட்டப்பட்டு இருந்தன, பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதரவில்லை இதனால் பாடசாலைகள் இயங்கவில்லை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து இருந்தது.

கல்முனை பொதுச் சந்தை வழமை போல் இயங்கியது

(பாண்டிருப்பு தினகரன் நிருபர் - துஜியந்தன்)

இன்று (25) பயங்கர வாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக தமிழ்க் கட்சிகள் கடையடைப்பு ஹர்த்தால் போராட்டத்திற்கு  தமிழ்க் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தபோதிலும் கல்முனை பிரதேசத்தில் கல்முனை பொதுச் சந்தை உட்பட பொதுப் போக்குவரத்து, அரச நிறுவனங்கள் ஆகியன  வழமை போன்று இயங்கியதை காணக்கூடியதாக இருந்தது.

களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை, வர்த்தக நிலையங்கள் இயங்கவில்லை

(பாண்டிருப்பு தினகரன் நிருபர் - துஜியந்தன்)

பயங்கர வாத எதிர்ப்பு சட்டம் மற்றும் தமிழ் மக்களுக்கான அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்க் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட  கடையடைப்பு ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

மண்முணை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலுள்ள பொதுச் சந்தை மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தது

இங்குள்ள பாடசாலைகளில் மாணவர்கள் வரவு மிகக் குறைவாக காணப்பட்டது. சில இடங்களில் மாணவர்கள் திரும்பிச் சென்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. தற்போது அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள பயங்கர வாத எதிர்ப்பு சட்டமானது முன்னைய பயங்கர வாத தடைச் சட்டத்தை விட மிக மோசமானதாகும் என அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் சிறுபான்மை மக்கள் இச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தில் நிர்வாக முடக்கம்

(மன்னார் குறூப்  நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில்  இன்று செவ்வாய்க்கிழமை(25)   பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு  தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில்  மன்னார் மாவட்ட வர்த்தக சங்கங்கள், மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், பொதுமக்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவு வழங்கியுள்ளது டன் மன்னார் மாவட்டம் முழுவதும் முற்றாக முடங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் பயங்கர வாத  சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள திணைக்களம், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்ற மை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்தக் கோரியும்,மதஸ்தலங்கள் தாக்கப் படுகின்றமை தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும்  இன்று (25) செவ்வாய்க்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில்   ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள துடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.

அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம் பெற்ற போதும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

(முல்லைத்தீவு நிருபர் - சண்முகம் தவசீலன்)

இன்று (25) வடக்கு கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை செல்வபுரம் பகுதியில் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது

உந்துருளியில் வந்த இருவர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள் இதன்போது பேருந்தின் முன்  கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பேருந்துக்களுக்கும் பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...