பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியில் 20 புகையிரத சேவைகள் முன்னெடுப்பு

இன்று முற்பகல் 8.00 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க போராட்டத்திற்கு மத்தியிலும் புகையிரத ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் இச்சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பயணிகளின் வசதிக்காக இன்றையதினம் (15) அவிசாவளை, சிலாபம், ரம்புக்கணை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம, களுத்துறை தெற்கு ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு நோக்கி 13 அலுவலக புகையிரத சேவைகள் வழமையான நேரத்தில் இயங்கும் எனவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றிரவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இன்று காலை ஒரு சில அலுவலக புகையிரத சேவைகள் இடம்பெறவில்லையெனவும் ஒரு சில சேவைகள் தாமதமானதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இவ்வாறான போக்குவரத்து பிரச்சினை கருதி மேல், மத்திய, சப்ரகமுவ உள்ளிட்ட மாகாணங்களில் பாடசாலை தவணை பரீட்சைகளை ஒத்திவைக்க அந்தந்த மாகாணங்களின் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தனர்.

அரசாங்கத்தின் வரி முறைமை, பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன் வட்டி அதிகரிப்பு, வரி விதிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பெருமளவான தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் தொழிற்சங்க வேலை நிறுத்தம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

குறித்த தொழிற்சங்க போராட்டத்திற்கு அமைய, நள்ளிரவு முதல் இலங்கை புகையிரத திணைக்களத்தின் லோகோமோட்டிவ் புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் 24 மணித்தியால வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளது. இதற்கு ஒரு சில புகையிரத தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்த போதிலும் ஒரு சில சங்கங்கள் தமது ஆதரவை வழங்குவதில்லையென முடிவு எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை புகையிரத சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்படுவதாக, போக்குவரத்து அமைச்சு நேற்றையதினம் அறிவித்திருந்தது.


Add new comment

Or log in with...