எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

- உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு ஆர்ப்பாட்டம்
- மு.ப. 9.30 - பி.ப. 5.00 வரை இடம்பெறவிருந்த அமர்வு 48 நிமிடங்களில் நிறைவு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றம் நாளை (22) மு.ப. 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து பாராளுமன்றம் நாளை (22) மு.ப. 9.30 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று (21) மு.ப. 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது, புதிய (4ஆவது) கூட்டத்தொடருக்கு அமைய, 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் 29 அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது தொடர்பான அறிவித்தலை சபாநாயகர் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

சபாநாயகரின் ஆசனத்திற்கு முன்னால் கூடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியவாறு தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து பாராளுமன்றத்தை நாளை (22) மு.ப. 9.30 வரை ஒத்தி வைப்பதாக, சபாநாயகர் மஹிந்த யாபா அறிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வு பி.ப. 5.00 மணி வரை இடம்பெறவிருந்த நிலையில் 48 நிமிடங்கள் மாத்திரமே இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...