ரூ. 1 கோடி கப்பம் கோரும் நோக்கில் காத்தான்குடியில் ஆசிரியர் கடத்தல்

- பிரதான சந்தேகநபர் கைது; சகோதரன் துபாய்க்கு தப்பியோட்டம்
- பயன்படுத்திய வேன், மோட்டார் சைக்கிள், ஜாக்கெட் உள்ளிட்டவை மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜ்வத் ஆசிரியரின் கடத்தல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றித்தடுத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எஸ். றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது 30 வயதுடைய, காத்தான்குடி 03, பள்ளி வீதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (10) ஈரான் சிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ரூ. 1 கோடி பணம் கோரி குறித்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாடகைக்குப் பெறப்பட்ட வேன் மற்றும் மோட்டார் சைக்கிள், ஜக்கட் ஆடை, இரண்டு ATM அட்டைகள், கையடக்க தொலைபேசி உள்ளிட்ட பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 06ஆம் திகதி மாலை முதல் குறித்த ஆசிரியர் காணாமல் போன சம்பவம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திpயிருந்தது.

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வீதியில் வைத்து தினமும் 10ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்குப் பெறப்பட்ட வேனின் மூலம் குறித்த ஆசிரியரை மேற்படி சந்தேகநபரும் அவரது சகோதரரும் கடத்திச் சென்று காங்கேயனோடை ஈரான் சிட்டியிலுள்ள தனது வீட்டில் மறைத்து வைத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய அவரது சகோதரர் அன்றைய தினமே துபாய் நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட அஜ்வத் ஆசிரியர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்றையதினம் (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக காத்ததான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரி.ஐ. ஜவ்பர்கான்)


Add new comment

Or log in with...