பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும், நிலைபேறான தனியார்துறை வளர்ச்சிக்கும் உலக வங்கி உதவி

- உலக வங்கித் தலைவர், ஜனாதிபதி இடையிலான சந்திப்பில் உறுதி

இலங்கை மக்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், நிலைபேறான தனியார்துறையின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் அவசியமான சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் (IDA) சலுகை அடிப்படையிலான நிதியுதவி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை கொள்கை ஆலோசனைக்கமைய உலக வங்கிக் குழுமம்  (WBG) வழங்கும் என்று அதன் தலைவர் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மல்பாஸ்ஸிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எகிப்தின் ஷாம் அல் ஷேக் நகரில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இலங்கையில் சவாலுக்குள்ளாகியுள்ள பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைமை தொடர்பில் உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆகியோர் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டியதன் உடனடி தேவைக் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய கடன் நெருக்கடிக்கு, உரிய தீர்வை உரிய நேரத்தில் காண வேண்டியது அவசியமென வலியுறுத்திய  உலக வங்கிக் தலைவர் மல்பாஸ், கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுக்களை உரிய தரப்புக்களுடன் தொடருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  ஊக்குவித்தார்.

இலங்கை அரச துறையிலுள்ள அதிகரித்த ஊழியர் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு பொதுச் செலவினங்களை வினைத்திறனுடன் கையாள்வதற்கான வழிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புக்களை  முன்னெடுப்பது குறித்தும் உலக வங்கித் தலைவர்  மல்பாஸ் மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துரையாடினர்.

விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான உரப் பயன்பாடு மற்றும் பெறுமதியை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும், சேவைத்துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் சுற்றுலா மற்றும் கல்வி ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

காலநிலை மாற்றம் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்களைத் தணிப்பதற்கும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நிதி தேவை என்பன தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (10) முற்பகல் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...