நேபாளத்தின் உறுதியான பங்காளியாக இருப்போம்

- இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹாலை வரவேற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், 'இந்தியா நேபாளத்தின் உறுதியான பங்காளியாக இருக்கும்' என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அமைச்சர் ஜெய்சங்கர் விடுத்துள்ள ட்வீட்டில், 'பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி நட்டா ஜியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நேபாளாத்தின் முன்னாள் பிரதமரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி எமது அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்கிறோம். 'அண்டை நாடு முதலில்' என்ற எங்களது கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில் முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கான தேடலில் நேபாளத்தின் உறுதியான பங்காளியாக நாம் இருப்போம்' என்றுள்ளார்.

இதேவேளை, நேபாள முன்னாள் பிரதமர் தஹால் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவை 'பா.ஜ.க. வை அறிந்து கொள்ளுங்கள்' என்ற பிரசார நிகழ்ச்சியின் போது சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பா.ஜ.க. தலைமையகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பா.ஜ.க. வின் சிரேஷ்ட தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இச்சந்திப்பு குறித்து பா.ஜ.க. வின் வெளிவிவகார துறைப் பொறுப்பாளர் விஜய் சவுதைவாலே குறிப்பிடுகையில், 'இது முக்கியமான சந்திப்பு' என்றும் 'நேபாளம் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்திருப்பது இதுவே முதல் தடவை' என்றும் கூறியுள்ளார்.

பா.ஜ.க. வின் தொலைநோக்கு, நோக்கம் மற்றும் பணி கலாசாரத்தை உலகின் பல நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில் 'பா.ஜ.க. வை அறிந்து கொள்ளுங்கள்' பிரசாரத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பில் பா.ஜ.க. தலைவர், நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 47 நாடுகளது தூதர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். அத்தோடு வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுடனும் இது தொடர்பில் சந்திப்பு இடம்பெற்றுள்ளன என்று 'இந்தியா ரைம்ஸ்' தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...