மருதமுனையில் மோட்டார்சைக்கிள் உதிரிப்பாகங்களை திருடியவர்கள் கைது

மருதமுனை பிரதான வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிச் சென்ற சந்தேகநபர்களை  பெரியநீலாவணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் நீண்டகாலமாக வேலை செய்துவந்த நபர் தனது சக நண்பர்களுடன் நேற்று (13) அதிகாலை குறித்த கடைக்கு வருகை தந்து கடையை உடைத்து, உதிரிப்பாகங்களை சாக்கு மூட்டைகளில் கட்டிக்கொண்டு பெரியநீலாவணை மயானத்திற்கு அருகில் மறைத்து வைத்துள்ளனர்.

இன்னும் சில மூட்டைகளை எடுத்துச் சென்றபோது வீதியில் நின்றவர்கள் சந்தேகத்திற்கிடமான இவர்களை விசாரித்தபோது திருடர்கள் அகப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து தீவிரமாக செயற்பட்ட பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் தலைமையிலான குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களையும் கைது செய்ததுடன் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய பட்டா ரக லொறி, மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்களில் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் வசித்து வருபவர்கள் எனவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் 13 வருட  காலமாக வேலை செய்து வந்தவர் எனக் கூறப்படும் நபர் ஒருவரும்  தனது சக நண்பர்களுடன்  இணைந்தே நேற்று (13) அதிகாலை வேளையில் குறித்த கடையை உடைத்து  உதிரிப்பாகங்களை உர மூடைகளில் கட்டிக்கொண்டு செல்ல தயாரான நிலையில் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் ஏனைய சந்தேகநபர்கள் பொதுமக்களினால் பிடிக்கப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் பெரியநீலாவணை மயானத்துக்கு அருகில் மறைந்திருந்த வேளை கைதாகினர். மற்றுமொருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் அச்சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...