வாரமஞ்சரி பிரதி ஆசிரியர் வாசுகியின் கணவர் எஸ். சிவகுமார் காலமானார்

வாரமஞ்சரி பிரதி ஆசிரியர் வாசுகியின் கணவர் எஸ். சிவகுமார் காலமானார்-Vasuki Sivakumar's Husband S Sivakumar Passed Away

தினகரன் - வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதி ஆசிரியர் வாசுகி சிவகுமாரின் கணவர், ஊடகவியலாளர் எஸ். சிவகுமார் (59) காலமானார்.

திடீர் சுகவீனமுற்று கடந்த சில தினங்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு (13) காலமானார்.

யாழ்ப்பாணம் உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட அவர் அச்சரன், ஆயனன், அனன்யா ஆகிய மூன்று குழந்தைகளின் தந்தையாவார்.

ஊடகவியலாளர், ஒலிபரப்பாளர் எனும் பல்துறையாளரான சிதம்பரப்பிள்ளை சிவகுமார், இறுதியாக தினகரன் பத்திரிகையிலிருந்து விடைபெறும்போது, ஒப்புநோக்குனராக கடமையாற்றியிருந்தார். 

அன்னாரின் பூதவுடல் இன்று (13) பிற்பகல் 1.30 மணியளவில் பொரளையிலுள்ள ரேமண்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பி.ப. 5.30 மணியளவில் பொரளை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1962ம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி தம்பு சிதம்பரம்பிள்ளை அம்பிகாவதி தம்பதியினரின் மகனாகப் பிறந்த இவர் கிருஷ்ணகுமார், அம்பிகுமார், உதயகுமார், நந்தகுமார், உமா குமாரி, பாமா குமாரி, மீனா குமாரி, சுகுமாரி ஆகியோரின் சகோதரராவார் என்பதுடன், சிதம்பரப்பிள்ளை வைரவநாதன் மற்றும் திலகவதி வைரவநாதன் ஆகியோரின் மருமகனும் ஆவார்.

உடுத்துறை மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டருந்த அவர் வாசிப்பிலும், தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வமும் அத்துறையில் தேர்ச்சியும் பெற்றிருந்தார்.

லேக் ஹவுஸ் வெளியீடாக வெளிவந்த அமுது மாதச் சஞ்சிகையின் இணை ஆசிரியராக விளங்கிய அவர் பின்னர் தினமுரசு நாளிதழின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். கவிஞராகவும் இலக்கிய பேச்சாளராகவும் அறியப்பட்டிருந்த சிவகுமார் கொழும்பு கம்பன் விழா மேடைகளில் தவறாமல் காணப்படும் முக்கியஸ்தர்களில் ஒருவராவார்.


Add new comment

Or log in with...