நுவரெலியா கந்தப்பளை-கோனப்பிட்டிய பகுதிக்கான போக்குவரத்து தடை

கோனப்பிட்டிய கல்கந்தை எனும் இடத்தில் இன்று (05) நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக நுவரெலியா கந்தப்பளை- கோனப்பிட்டிய பகுதிக்கான போக்குவரத்து  முற்றாக தடைப்பட்டுள்ளது.

நுவரெலியாவிலிருந்து கந்தப்பளை வழியாக புரூக்சைட் சந்தி ஊடாக கோனப்பிட்டிய மற்றும் மந்தாரம் நுவர பகுதிக்கு செல்லும் ஒரு வழி பிரதான வீதியே இவ்வாறு போக்குவரத்து தடைக்கு உள்ளாகியுள்ளது. இப்பிரதான வீதியின் கல்கந்தை பகுதியில் காணப்படும் பழமை வாய்ந்த  மூன்று பாலங்களில் கோனப்பிட்டிய பகுதியில் இருந்து வரும் முதல் பாலத்தின் மீது பாரிய கற்கள், மண்மேடுகள், மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.

அதேநேரத்தில் கடந்த இரண்டு தினங்களாக கோனப்பிட்டிய பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே இம்மண்சரிவு ஏற்பட்டு வீதி மூடப்பட்டதால் இவ்வீதி ஊடான போக்குவரத்துக்கு முற்றாக தடையேற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோனப்பிட்டிய மற்றும் மந்தாரம் நுவர ஆகிய பகுதியிலிருந்து நுவரெலியா, இராகலை போன்ற பகுதிகளுக்கு காலை வேளையில் புறப்படும் பயணிகள் போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட வைத்தியசாலைகளுக்கு செல்வோர் மற்றும் அன்றாடம் தொழிலுக்கு இவ்வீதி ஊடாக பயணிப்போர் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் புரூக்சைட் சந்தியிலிருந்து ஹய்பொரஸ்ட் வழியாக கோனக்கலை சந்தி வரையில் வாகன போக்குவரத்து இடம்பெறுகிறது. அதேபோல கோனக்கலை சந்தியிலிருந்து விராலிகலை, சீனாப்பிட்டிய தோட்ட வழியாக பாவனைக்கு உதவாத வீதியை மாற்று வீதியாக கொண்டு சிறிய ரக வாகனங்களின் போக்குவரத்து இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வீதி புனரமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சரிந்துள்ள பாரிய கற்கள், மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக இராகலை மற்றும் மந்தாரம் நுவர பொலிஸார் தெரிவித்தனர்.

ஆ.ரமேஸ்


Add new comment

Or log in with...