22 பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளில் 11 இலிருந்து பிரதிவாதிகள் விடுதலை

22 பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளில் 11 இலிருந்து பிரதிவாதிகள் விடுதலை-Central Bank Bond Scam-All Defendent Released from 11 Out of 22 Charges

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கலில், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஏலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 15 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுதியமை தொடர்பான 22 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா, நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்றையதினம் (06) இதனை அறிவித்தது.

குறித்த வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகள் மீது குறித்த குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குக்கு பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்த பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள், பிரதிவாதிகளுக்கு எதிராக குறித்த 11 குற்றச்சாட்டுகளை தொடர முடியாத என்பதை வலியுறுத்தியிருந்தனர்.

அதனடிப்படையில் குறித்த 22 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுக்கள் மீது தொடர்ந்து வழக்கு நடத்த முடியாததால் அவற்றில் இருந்து பிரதிவாதிகளை விடுதலை செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கை ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில் வழக்கை அன்றையதினத்திற்கு ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.