இலங்கைக்கு அதிவேக இணைய சேவை; கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனத்துடன் பேச்சு

இலங்கைக்கு அதிவேக இணைய சேவை; கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனத்துடன் பேச்சு-Starlink Internet Services for Sri Lanka

கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் (Elon Musk) ரொக்கெட் நிறுவனமான SpaceX உடன் இணைந்த, அதன் செயற்கைக்கோள் இணையப் பிரிவான Starlink உடன் இலங்கை பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ட்விற்றர் பதிவொன்றை இட்டுள்ள TRC இதனைத் தெரிவித்துள்ளது.

 

 

இலங்கையில் Starlink இணைய சேவைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் SpaceX நிறுவனத்துடன் பூர்வாங்க கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக TRC தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் எதிர்காலத்தில் சேவையை ஆரம்பிப்பதற்கான ஒழுங்குபடுத்தல் மற்றும் முன்நிபந்தனைகள் உள்ளிட்ட விடயங்கள் முதல் சுற்று கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக TRC தெரிவித்துள்ளது.

கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் ரொக்கெட் நிறுவனமான SpaceX இன் செயற்கைக்கோள் இணையப் பிரிவான Starlink, கடந்த நவம்பர் 01 ஆம் திகதி இந்தியாவில் தனது வணிகத்தை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசாங்கத்திற்கு அந்நிறுவனம் வழங்கியிருந்து ஆவணங்கள் ஊடகங்களுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இணைய சேவைகளை ஆரம்பிப்பதற்கு அந்நிறுவனம் தயாராகி வருகின்றமை தெரிய வந்திருந்தது.

Starlink ஆனது, SpaceX இன் அதிவேக செயற்கைக்கோள் இணையத் திட்டமாகும். இது கிராமப் புறங்கள் உள்ளிட்ட அடைய முடியாமல் உள்ள கஷ்டப் பிரதேசங்களில் நம்பகமான மற்றும் கட்டுப்படியான இணைய சேவையை வழங்குவதன் மூலம் இணை இணைப்பை அடைவதில் உள்ள இடைவெளியைக் குறைப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.