ரூ. 35.5 மில். இலஞ்ச ஊழல் வழக்கு வாபஸ்; நிஸ்ஸங்க, பாலித்த விடுதலை

ரூ. 35.5 மில். இலஞ்ச ஊழல் வழக்கு வாபஸ்; நிஸ்ஸங்க, பாலித்த விடுதலை-Bribery Case-Colombo HC Release Avant-Garde-Nissanka Senadhipathi and Major General (Rtd) Palitha Fernando

மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான இலஞ்ச வழக்கிலிருந்து, Avant Garde தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெனாண்டோ ஆகியோரை விடுவிக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பாக 2012 - 2014 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் இருவருக்கும் இடையில் ரூ. 35.5 மில்லியன் இலஞ்சம் பரிமாறப்பட்டதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றம் சாட்டப்பட்டு 47 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அரசாங்கத்திற்கு சொந்தமான ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெனாண்டோவுக்கு, Avant Garde தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் குறித்த இலஞ்சத் தொகை வழங்கப்பட்டதாக, குறித்த இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு, பல வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் (27) குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த குற்றச்சாட்டுகளை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மீளப் பெறுவதாக அறிவித்ததன் அடிப்படையில், கொழும்பு மேல் நீதிமன்றம் சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பில், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கிலிருந்து அவன்கார்ட் தலைவர், ஓய்வு பெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பிரதிவாதிகளும் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் ஏற்கனவே நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...