அல்குர்ஆனிய ஆளுமையின் உருவாக்கம்

அல்குர்ஆனிய ஆளுமையை உருவாக்குவதற்கான முன்மாதிரியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து பெறவேண்டியுள்ளது. அன்னார் முழுமையான அல்குர்ஆனிய ஆளுமையைப் பெற்ற பல்லாயிரம் தனிமனிதர்களை உருவாக்கியது மாத்திரமல்ல, அல்குர்ஆனிய சமூகம் ஒன்றினையே கட்டியெழுப்பினார்கள். நபியவர்கள் உருவாக்கிய மனிதர்கள் நடமாடும் குர்ஆன்களாகத் திகழ்ந்தனர். பாதையிலும் கடைத்தெருவிலும் என்றும் எப்போதும் அல்குர்ஆனை நிதர்சனமாக அன்று காணக்கூடியதாயிருந்தது.

இன்று ஏன் அத்தகைய ஓர் அல்குர்ஆனிய சமூகத்தை உருவாக்க முடிவதில்லை? அன்றைய ஸஹாபா சமூகத்திற்குக் கிடைத்த அல்குர்ஆன் இன்றும் உள்ளது. அவர்கள் பெற்ற ஸுன்னாவும் ஸீராவும் இன்றும் கிடைக்கக்கூடியதாய் உள்ளன. இன்று நபி மாத்திரம் எம்மத்தியில் இல்லை. ஆயினும், குறித்த சமூகம் உருவாக நபியில்லாமை தான் காரணம் என நியாயம் கற்பிக்க முடியாது; ஏனெனில், இம்மார்க்கம் வாழ்வதற்கும், உலகில் நிலைப்பதற்கும், நபி தொடர்ந்தும் உயிர் வாழ்வது அவசியமென்றிருப்பின் இம்மார்க்கம் முழுமனித சமுதாயத்திற்கும் உரியதாகவும், இறுதித் தூதராகவும், மறுமைவரை மனித குலத்திற்கு வழிகாட்டியாகவும் அமைக்கப்பெற்றிருக்க முடியாது.

இவ்வேதம் நிலைக்க நபியவர்கள் உயிர்வாழ்வது அவசியமானதன்று என்பதனாலேயே அல்லாஹ் அன்னாரை அவர்களின் 23 வருடகால பணியின் பின்னர் தன்பக்கம் எடுத்துக் கொண்டான். எனவே, பிற்பட்ட காலத்தில் இன்றுவரை எதிர்பார்க்கப்படுகின்ற அல்குர்ஆனிய சமூகம் உருவாகாமல் இருப்பதற்குரிய காரணமாக நபியின் இழப்பைக் கூற முடியாது.

அவ்வாறே அன்றைய அல்குர்ஆனிய சமூகம் உருவாக நபி உயிருடன் வாழ்ந்தமையே அடிப்படைக்காரணம் என்றும் கூற முடியாது. அப்படியாயின், அன்றைய சமூகத்தை உருவாக்கிய அன்றைய மனிதர்களை அல்குர்ஆனிய ஆளுமை பெற்றவர்களாக மாற்றிய வேறு காரணிகள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.

அக்காரணிகளை ஆராய்ந்து அதன்படி நடப்பதே காலத்தின் தேவையாகும்.

முஹிப்புல் ஹக்


Add new comment

Or log in with...