3ஆம் தவணை ஆரம்பம் மேலும் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு

3ஆம் தவணை ஆரம்பம் மேலும் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு-Starting 3rd Term School Postponed for 2 More Weeks

- மீண்டும் இரு வாரங்களில் ஆராயப்படும்
- தொலைதூர கல்வியை தொடர்வதை ஆராய்வு
- O/L பரீட்சைக்கான ஆயத்தம்; பாடங்கள் நிறைவு தொடர்பில் ஆராய்வு

எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருந்த, அரசாங்க பாடசாலைகளின் 3ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பது இவ்வாறு மேலும் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை மீண்டும் இரு வாரங்களின் பின், பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து, அதற்கமைய முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அதுவரையில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில், மாகாண கல்விப் பணிப்பாளர்களுடன் இன்று (02) பிற்பகல் இரண்டரை மணித்தியாலங்கள் கலந்தலாசிக்கப்பட்டதாக, பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

கடந்த முறை போன்று படிப்படியாக பாடசாலைகளை ஆரம்பித்தல், Online உள்ளிட்ட தொலைதூர கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.

அத்துடன் மாகாணங்களில் காணப்படும் வளங்களின் அடிப்படையில் தொலைதூர கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அவர், தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 18 - 26 வரை இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பிலும், எவ்வளவு தூரத்திற்கு பாடங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தொலைக்காட்சி, வானொலி மூலம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...