மைத்திரி, ரணில் சார்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்னிலையாகாது | தினகரன்


மைத்திரி, ரணில் சார்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்னிலையாகாது

மைத்திரி, ரணில் சார்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்னிலையாகாது-SC allows time Ranil Maithri-FR Over Easter Attack

- ஏப். 21 தாக்குதல் வழக்கில் இருவரும் பிரதிவாதிகள்
- ஆட்சேபனைகளை முன்வைக்க மார்ச் 06 வரை கால அவகாசம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமைமீறல் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராக மாட்டாது என, திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (20) குறித்த விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, திணைக்களம் நீதிமன்றிற்கு இதனை அறிவித்தது.

சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் நாயகம் பர்ஸானா ஜெமீல் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, இது தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு மார்ச் 06ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்குமாறு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது.

குறித்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதிபதிகளான புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெனாண்டோ, ப்ரீத்தி பத்மான் சுரசேனா ஆகிய 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோர் சார்பில் தனியார் சட்டத்தரணிகள் இருவர் இன்றையதினம் (20) நீதிமன்றில் முன்னிலையாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து குறித்த மனு விசாரணையை எதிர்வரும் மே 12, 13, 14 ஆகிய தினங்களில் மேற்கொள்வதற்கான உத்தரவையும் நீதிபதிகள் குழாம் அறிவித்தது.


Add new comment

Or log in with...