இஸ்ரேலிய குடியேற்றங்களின் சட்டவிரோத தன்மையை நீக்கி அமெரிக்கா பிரகடனம் | தினகரன்


இஸ்ரேலிய குடியேற்றங்களின் சட்டவிரோத தன்மையை நீக்கி அமெரிக்கா பிரகடனம்

பலஸ்தீனம் கடும் கண்டம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் குறித்த நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் அமெரிக்கா அந்த குடியேற்றங்களை தொடர்ந்தும் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று பார்க்க முடியாது என அறிவித்துள்ளது.

மேற்குக் கரையின் அந்தஸ்த்து இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பேச்சுவார்த்தையிலேயே தங்கி இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த மாற்றத்தை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.

1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திலேயே இந்த இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்தப் பிரச்சினை இஸ்ரேல், சர்வதேச சமூகம் மற்றும் பஸ்தீனத்திற்கு இடையே தொடர்ந்து நீடித்து வந்தது.

“அனைத்து தரப்புகளினதும் சட்ட வாதங்களை உன்னிப்பாக அவதானித்தபின் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று பொம்பியோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேற்குக் கரையில் நிறுவப்பட்டிருக்கும் இஸ்ரேலிய யூதக் குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று பார்க்க முடியாது என்று அமெரிக்கா முடிவுக்கு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“சிவில் குடியேற்றங்களை சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று அமைப்பது பொருந்துவதாக இல்லை.

அது அமைதிக்கு வாய்ப்பை ஏற்படுத்தாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவு சர்வதேச ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பலஸ்தீன தலைமை பேச்சுவார்த்தையாளர் சயேப் எரகத் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சட்டத்தை காட்டுச் சட்டமாக மாற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, இந்தக் கொள்கை மாற்றம் ஒரு வரலாற்று தவரை சரிசெய்வதாகும் என்று குறிப்பிட்டிருப்பதோடு ஏனைய நாடுகளும் இதனை பின்பற்ற அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான சர்ச்சைக்குரிய விடயங்களில் ஒன்றாக யூதக் குடியேற்றங்கள் இருந்து வருகின்றன.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை ஆக்கிரமித்தது தொடக்கம் அங்கு சுமார் 140 குடியேற்றங்களில் 600,000 யூதர்கள் வரை வசிக்கின்றனர். சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த குடியேற்றங்கள் பரவலாக சட்டவிரோதமானதென்றே கருதப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

இந்த யூதக் குடியேற்றங்கள் தமது எதிர்கால சுதந்திர நாட்டில் அமைக்கப்பட்டிருப்பதால் அவைகள் நீக்கப்பட வேண்டும் என்று பலஸ்தீனம் வலியுறுத்தி வருகிறது.

1978 இல் ஜிம்மி காட்டர் சிவில் குடியேற்றங்கள் அமைப்பது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று அறிவித்தது. என்னும் 1981 இல் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் இந்த குடியேற்றங்கள் இயல்பாகவே சட்டவிரோதமானது என்று தாம் நம்பவில்லை என்று அறிவித்திருந்தார். அது தொடக்கம் இஸ்ரேலிய குடியேற்றங்களை ‘சட்டவிரோதம்’ என்ற சொல்லுக்கு பதில் ‘முறையற்றது’ என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேல் விவகாரத்தில் மேலும் சகிப்புத் தன்மையை பேணுகிறது.


Add new comment

Or log in with...