ரூ. 4,000 இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது | தினகரன்


ரூ. 4,000 இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

ரூ. 4,000 இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது-Bribe Arrested-Development Officer-Police Constable

ரூ. 2,000 பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது

ஓபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து ரூ. 4,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர் (Development Officer) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (08) ஓபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேகநபர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் (கணக்கு உதவி) ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின், விசாரணை பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

நீர்கொழும்பு நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கொன்றில், பிணை பணத்தை விடுவிப்பதற்காக, ரூ. 5,000 பணத்தை கோரியுள்ள குறித்த சந்தேகநபர், அதில் ரூ. 4,000 பணத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த வேளையில், குறித்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக, பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை, ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, பொரளை பொலிஸ் நிலையத்தின் சுற்றுச் சூழல் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

முறைப்பாட்டாளர், பொது இடத்தில் மதுபானம் அருந்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காதிருக்க ரூ. 2,000 பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட நிலையில், பொரளை சந்தியில் வைத்து குறித்த சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும், அதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின், விசாரணை பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...