மன்னாரில் வீட்டுத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க நிதி | தினகரன்


மன்னாரில் வீட்டுத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க நிதி

ரூபா 30 மில்லியனை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்க விசேட திட்டம்

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்து வரும் வீடமைப்புத் திட்டங்களுக்கு நிதி கிடைப்பதில் நிலவிய காலதாமதம் தற்போது நீங்கியுள்ளதாகவும் நேற்று (11) இத்திட்டத்தி ற்கு 30மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் நோயல் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.                        'செமட்ட செவன' என்ற தொனிப் பொருளில் நேற்று (11) ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்பு சம்பந்தமாக இதன்போது விளக்கமளிக்கப் பட்டது.

இவ்வூடகச் சந்திப்பில் மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முகாமையாளர் டீ.யூட் குலாஸ், கணக்காளர் கா.சிவபிரதாப் ஆகியோரும் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்ட முகாமையாளர் தெரிவித்ததாவது:

 2016ஆம் ஆண்டு 1127குடும்பங்களுக்கு ஒரு வீட்டுக்கென தலா 10  சீமெந்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டன. அத்துடன் வருடத்துக்கு 3.73வீத மிக குறைந்த வட்டிக்கு தலா 75ஆயிரம் ரூபா கடனும் வழங்கப்பட்டது.

இந்நிதியுதவியை அடுத்த வருடம் ஒரு இலட்சம், இரண்டு இலட்சம், மூன்று இலட்சங்களாக உயர்த்தி மூன்று விதமான கடன் திட்டத்தை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கான வட்டியும் 3.73, 3.74, 3.75என்ற வட்டி வீதத்தில் அறவிடப்படவுள்ளன. ஒரு தேர்தல் தொகுதியில்  3000குடும்பங்களுக்கு சீமெந்து வழங்கும் திட்டத்தை மேலும் அதிகரித்து பத்தாயிரம் குடும்பங்களுக்கு சீமெந்து வழங்கும் திட்டமும் அமுலாக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு அமைச்சரின் விஷேட திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் ரூபா 5இலட்சம் ரூபா மானியமாக வழங்கி மாதிரி கிராமங்கள் அல்லது கொத்தனி திட்டத்தை உருவாக்கி இங்கு வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கிராம அலுவலகர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவ்வீடுகள் வழங்கப்பட்டன.

இதில் தற்பொழுது 4திட்டங்கள் பூர்த்தி அடைந்துள்ளதால், இவ்வீடுகள் மக்களிடம் விரைவில் கையளிக்கப்படவுள்ளன.

2018ஆம் ஆண்டு இத்திட்டம் விரிவாக்கப்பட்டு 48திட்டங்கள் அமுல் செய்யப்பட்டது. இதில் 47திட்டங்கள் வீடமைப்பு அதிகார சபையின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டன. 2019ஆம் ஆண்டு அமைச்சர் சஜித்தின் விஷேட திட்டமாக ஒரு வீட்டுக்கு ஏழரை இலட்சம் ரூபா வழங்கி இத்திட்டம் தற்பொழுது அமுல் செய்யப்பட்டு வருகின்றது.

தற்போது இதற்கான நிதியும் கிடைத்துள்ளதால், பயனாளிகளுக்கு இவற்றைப் பகிர்ந்தளிக்க கூடியதாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தலைமன்னார் நிருபர்


Add new comment

Or log in with...