Monday, April 29, 2024
Home » கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்; யாழ். மாவட்ட செயலகத்தில் ஆராய்வு

கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்; யாழ். மாவட்ட செயலகத்தில் ஆராய்வு

by Gayan Abeykoon
January 25, 2024 6:36 am 0 comment

யாழ்ப்பாணம், கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி இம்முறை குழை சாதமும் சர்க்கரைப் பொங்கலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கச்சதீவு திருவிழா தொடர்பான முன் ஆயத்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  

இது தொடர்பான கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அம்மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்ற போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கச்சதீவு திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23ஆம், 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், இம்முறை திருவிழாவில் பங்குகொள்ள இலங்கையைச் சேர்ந்த 4 ஆயிரம் பக்தர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு 23ஆம் திகதி இரவு குழை சாதமும் , மறுநாள் 24ஆம் திகதி காலை சர்க்கரை பொங்கலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், செலவைக் குறைக்கும் முகமாகவே இந்த உணவுகளை வழங்க தெரிவு செய்துள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இம்முறை தேவாலய சூழலில் பக்தர்கள் தீ மூட்டி உணவு சமைப்பதற்கு அனுமதி வழங்காதிருக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதேவேளை படகுகள் மூலம் தேவாலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கான சோதனையை துரிதப்படுத்தி, அவர்களை உட்செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், இதற்கான ஏற்பாட்டை கடற்படையினர் கவனத்தில் எடுப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த வருடம் கச்சதீவு திருவிழாவுக்கு சென்ற இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் சோதனை நடவடிக்கைக்காக நீண்டநேரம் கடற்கரை வெய்யிலில் காத்திருந்தமை தொடர்பாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட போதே , இம்முறை சோதனை நடவடிக்கைக்காக மேலதிக கடற்படையினரை ஈடுபடுத்துவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

(யாழ். விசேட நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT