Home » நல்லூரில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

நல்லூரில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

by Gayan Abeykoon
January 25, 2024 6:33 am 0 comment

யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் நெற்புதிர் எடுக்கும் அறுவடை நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை பூஜை வழிபாடுகளுடன்  சிறப்பாக நடைபெற்றது.  

தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் பாரம்பரிய நிகழ்வையொட்டி, கோயில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது நெற்புதிர் அறுவடைக்காக கோயிலுக்குச் சொந்தமான மறவன்புலவிலுள்ள வயலுக்குச் சென்று, வயலில் பூஜை வழிபாடுகளை நடத்தி நெற்புதிர் அறுவடையில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல்லிலிருந்து அமுது தயாரித்து, கந்தசுவாமிப் பெருமானுக்கு பூஜை வழிபாடுகளுடன் படையல் செய்தனர். இவ்வாறு படையல் செய்யப்பட்ட அமுதை பக்தர்களுக்கும் அவர்கள் வழங்கினர்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இந்த வழிபாட்டு முறை அக்கோயில் மரபாக, பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வருவதுடன், இப்புதிர் விழா 290ஆவது வருடமாகவும் இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(பருத்தித்துறை விசேட, யாழ். விசேட நிருபர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT