Friday, April 26, 2024
Home » மனிதனின் மூன்று சொத்துக்கள்

மனிதனின் மூன்று சொத்துக்கள்

by sachintha
January 12, 2024 12:05 pm 0 comment

உண்மையான சொத்து என்பது நாம் பிறருக்கு செய்யும் பொருளாதார உதவியும், தானதர்மம் மட்டும்தான். இவ்வாய்ப்பு இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே கிடைக்கப்பெறும். மறுவுலகில் விருப்பப்படி வாழ வாய்ப்பு கிடைக்காது.

வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். ஓய்வின்றி கண்விழித்து பாடுபடுகிறார்கள். இரவும் பகலும் உடலை வருத்தி, உணவை சுருக்கி, ஓய்வை குறைத்து, உடல்நலம் பேணாமல் பொருளாதாரத்தை மட்டுமே இலக்காக வைத்து தானியங்கி இயந்திரத்தை போன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் சில்லறை தேவை என்ற ஒற்றைக் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பலர் இயங்குகிறார்கள்.

மனித வாழ்க்கைக்கு பொருளாதாரம் அவசியம். ஆனால் பொருளாதாரம் மட்டுமோ சொத்துக்கள் மட்டுமோ வாழ்க்கை அல்ல.

“அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரழி) அவர்கள் கூறியுள்ளதாவது, “நபி (ஸல்) அவர்கள் ‘மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது’ (அல் குர்ஆன் 102:1,2) என்ற வசனங்களை ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்) எனது செல்வம், எனது செல்வம்” என்று கூறுகிறான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும், உடுத்திக் கிழித்ததையும், தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்நபிமொழியின்படி, “அடியான், ‘என் செல்வம், என் செல்வம்’ என்று கூறுகிறான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குச் சொந்தமானதாகும்.

அவன் உண்டு கழித்ததும், உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக் கொண்டதும்தான் அவனுக்குரியவை. ‘மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக் கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்லக்கூடியவையும் ஆகும்’ எனவும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

நமது சொத்து என்பது நாம் சேர்த்து வைத்தவை அல்ல. அது நமது வாரிசுகளுக்கு உரியவையாகும். நாம் இறந்ததும் அவற்றை அவர்கள் பங்கு வைத்து, பாகம் பிரித்துக் கொள்வார்கள். உண்மையான நமது சொத்து என்பது இதுவரைக்கும் நாம் உண்டு அனுபவித்ததும், உடுத்தி அனுபவித்ததும்தான். மூன்றாவதாக நாம் பிறருக்காக செய்த தர்மம் மறுவுலகில் நமக்கு நன்மைகளாக மாற்றப்பட்டு, நமது கணக்கில் சேமித்து வைக்கப்படும். மற்றவை நமது கையை விட்டு சென்றுவிடும்.

“உங்களில் ஒருவருக்கு மரணம் வரும் முன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து தான தர்மம் செய்து கொள்ளுங்கள். (அவ்வாறு செய்யாமல் மரணிக்கும் சமயம்) ‘என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக்கூடாதா? அப்படியாயின் நானும் தானதர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேன்’ என்று கூறுவான். ஆனால், அல்லாஹ் எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தமாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்”. (அல் குர்ஆன் 63:10,11)

ஆகவே இவ் உலக வாழ்வில் தானதர்மம் செய்ய வேண்டும். அதுவே இறைவனின் அன்பையும் அருளையும் பெற்றுத்தரக்கூடியதாக அமையும்.

அப்துல்லாஹ்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT