Friday, April 26, 2024
Home » புதிய வருடத்தில் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை

புதிய வருடத்தில் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை

- எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் கூட தீர்மானம்

by Prashahini
January 8, 2024 11:10 am 0 comment

பாராளுமன்றம் எதிர்வரும் நாளை (09) முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய நாளை (09) செவ்வாய்க்கிழமை: மு.ப 09.30 முதல் மு.ப 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 05.00 மணிவரை தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), தேசிய நீரளவை சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தின் கீழ் 2355/30ஆம் இலக்க வர்த்தானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் 2334/55ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், இலங்கை பட்டய கப்பல் தரகர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், இலங்கை சித்த உளவியல்சார் உயர் கற்கைநெறிகள் திறந்த நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன இரண்டாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 05.00 மணி முதல் பி.ப 05.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை (ஆளும் கட்சி) மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

2024 ஜனவரி 10ஆம் திகதி புதன்கிழமை: மு.ப 09.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக (04 கேள்விகள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 10.00 மணி முதல் 10.30 மணி வரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக (05 கேள்விகள்) ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் பி.ப 05.00 மணிவரை நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பில் 2023 நவம்பர் 08ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் இரண்டாவது நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.

அன்றையதினம், மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம், அற்றோனித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்த) சட்டமூலம், மோசடிகளைத் தடுத்தல் (திருத்த) சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்றையதினம் பி.ப 05.00 மணி முதல் பி.ப 05.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி மாதம் 11ஆம் திகதி வியாழக்கிழமை: மு.ப 09.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.

2024 ஜனவரி மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை: மு.ப 09.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய, வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நலனோம்புகை வசதிகளை வழங்குதல் (கெளரவ சமிந்த விஜேசிறி), நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை கடன் வழங்கும் நிறுவனங்களை கடுமையான ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு உட்படுத்துதல் (கெளரவ கோகிலா குணவர்தன), உள்நாட்டு அரிசி வகைகளின் போசாக்குக் குணம் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டல் (கெளரவ புத்திக பத்திறண), பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் முறைமைக்குப் பதிலாக தேயிலை சிறு தோட்ட முறைமையொன்றினை ஏற்படுத்துதல் (கௌரவ வேலு குமார்) மற்றும் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய முறையியலை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை வெளியிடல் (கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம்) குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதிக்கப்படவுள்ளன.

இதன் பின்னர் பி.ப 05.00 மணி முதல் பி.ப 05.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்) எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT