பிரான்ஸின் பழமை வாய்ந்த தேவாலயத்தில் தீ | தினகரன்

பிரான்ஸின் பழமை வாய்ந்த தேவாலயத்தில் தீ

பிரான்ஸில் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் கத்தோலிக்கத் தேவாலயத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால், மேற்கூரை மற்றும் பிரதான ஊசிக் கோபுரம் இடிந்து விழுந்துள்ளது.

பிரான்ஸின் தலைநகரான பரிஸில் அமைந்துள்ள 850ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தோலிக்கத் தேவாலயமான  நோட்ரே டேம் கதீட்ரல் எனும் தேவாலயத்திலேயே நேற்று (15) திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் சுமார் 13 மில்லியனுக்கு அதிகமானோர் தரிசிக்கும் சுற்றுலாத் தலமாக விளங்கும் குறித்த தேவாலயத்தில் புனரமைப்புப் பணி இடம்பெற்றுவந்த நிலையில், இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீ விபத்து  ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இத்தேவாலயத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்துவரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரான்ஸின் கோதி (French Gothic architecture) கட்டடக் கலைக்கு உதாரணமாகத் திகழ்ந்துவந்த இப்பழமையான தேவாலயம் தீக்கிரையானமை அந்நாட்டு மக்கள் மத்தியில் மாத்திரமன்றி கத்தோலிக்க பக்தர்கள் மத்தியில் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கத்தோலிக்க தேவாலயம், கத்தோலிக்கர்கள் மற்றும் பிரான்ஸின் 850 வருட பழமை வாய்ந்த அடையாளச் சின்னமாக திகழ்ந்து வருகின்றது.

1163ஆம் ஆண்டு பாப்பரசர் அலெக்ஸாண்டர் iii மற்றும் மன்னர் லூயிஸ் vii ஆகியோரினால் இத்தேவாலயத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், 13ஆம் நூற்றாண்டில் 1345 இல் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...