Friday, April 26, 2024
Home » பெண்களை கௌரவித்துள்ள மார்க்கம்

பெண்களை கௌரவித்துள்ள மார்க்கம்

by Gayan Abeykoon
December 29, 2023 11:45 am 0 comment

ஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை நோக்கும் போது அவை தனித்துவமானதாகவும் சிறப்பானதாகவும் இருப்பதை அவதானிக்கலாம். இஸ்லாம் ஒருபோதும் பெண்களை இழிவாகப் பேசியதுமில்லை. ஆண்களுக்குக் களிப்பூட்டும் சந்தைப் பொருளாகவும் பெண்களை ஆக்கி வைக்கவுமில்லை.

மாறாக ஆண்களுக்குரிய அதே கண்ணியம், மரியாதை, மாண்பு கொண்டு பெண்களும் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வழங்கியுள்ளது இஸ்லாம். இஸ்லாமிய வழிகாட்டல்களில் தவறுவிடும் ஆண்களை கண்டிக்கும் இஸ்லாம், மாற்று நடவடிக்கைகள் மூலம் பெண்களைப் பாதுகாக்கவும் ஆக்கபூர்வமான திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அல்லாஹ் திருக்குர்ஆனில், ‘ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்க்கை வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோருக்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம்.’ (அல் குர்ஆன் 16:97) என்று குறிப்பிட்டுள்ளான்.

இஸ்லாத்தில் திருமணம் ஓர் இறை வணக்கமாகும். அது பாவங்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கக்கூடியதாகும். திருமண வாழ்க்கையில் பெண்களை அடிமைப்படுத்துவதற்கோ எவ்வித காரணமுமின்றி அவளை விவாகரத்து செய்வதற்கோ இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.

இஸ்லாத்தின் பார்வையில் ஆண்களும் பெண்களும் சமமாவார்கள். எவர் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நற்கருமமாற்றி ஒழுக்கமான வாழ்க்கை வாழ்கிறாரோ அவரே உயர்ந்தவராவார். மேலும் பெண்களை இழிவாக நோக்கியவர்களை இஸ்லாம் கண்டித்துள்ளதோடு அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தையும் வழங்கியுள்ளது. அல்லாஹ் தூய பெண்களைத் தூற்றுவதை வன்மையாகக் கண்டித்துள்ளான்.

‘எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர் நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடி கொடுங்கள். இனி அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்குமே ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும் அவர்களே தீயவர்கள்’ (அல்குர்ஆன் 24:4)

‘கற்புடைய கள்ளங்கபடமற்ற இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் மீது எவர்கள் அவதூறு கூறுகின்றார்களோ அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கடும் வேதனையும் இருக்கிறது’

(அல் குர்ஆன் 24:23).

மேலும் ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘தாயின் பாதத்தடியில் பிள்ளையின் சுவர்க்கம் இருக்கிறது’ என்று குறிப்பிட்டதாக அப்துல்லாஹ் அம்ருபின் ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(நபிமொழி)

அல்லாஹ்வினதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினதும் கூற்றுகள் இஸ்லாம் பெண் இனத்துக்கு வழங்கியுள்ள அந்தஸ்தை தெளிவுபடுத்துகிறது. மேலும் குடும்ப வாழ்க்கையிலும் கூட பெண்ணின் உரிமையையோ, சுதந்திரத்தையோ பறிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. திருமணம் முடித்தல், விவாகரத்து பெறுதல், மறுமணம் செய்தல் போன்ற சகல விடயங்களிலும் பெண்களுக்குச் சமமான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

‘வளர்ந்ததொரு பெண் பிள்ளையிடம் அவளது திருமணத்திற்கு அனுமதி கேட்க வேண்டும். அவள் மௌனமாக இருந்தால் அதுவே அனுமதியாகும். அவள் இணங்காவிட்டால் அவள் மீது நிர்ப்பந்தம் கூடாது.’ என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: திர்மிதீ)

‘மேலும் கணவன், மனைவிக்கிடையே உறவு முறியுமோ என அஞ்சினால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடுவரை நியமியுங்கள். இவ்விருவரும் உறவைச் சீர்திருத்த நாடினால் அல்லாஹ்வும், அவ்விருவருக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான்’.

(அல் குர்ஆன் 4:36)

மேலும் இஸ்லாத்தின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில் அது பெண்களுக்கான மறுமணத்தை அங்கீகரித்து இருப்பதுதான்.

சட்டபடி விவாகரத்தான பெண்களுக்கும், கணவர் மரணிப்பதன் மூலம் விதவைகளான பெண்களுக்கும் இஸ்லாத்தில் மறுவாழ்வு உண்டு. அத்தகைய பெண்கள் மறுமணம் செய்வதற்கு பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது.

‘நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்து அவர்கள் தங்கள் தவணையைப் பூர்த்தியாக்கினால் அவர்கள் தங்களுக்குரிய துணைவர்களை நேர்மையான முறையிலும் பரஸ்பர பொருத்தத்தின் அடிப்படையிலும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்’ (அல் குர்ஆன் 2:32)

இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள இந்த கண்ணியம், மதிப்பு, உரிமைகள் எதுவும் அவள் விடுதலைப் போராட்டம் நடத்திப் பெற்றதில்லை. மாறாக 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அல் குர்ஆனின் கட்டளைகள் மற்றும் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களின் மூலம் பெற்றுக் கொண்டவையாகும்.

✒️ கலாபூஷணம்  யாழ். அஸீம்… ✒️

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT