ஹபாயா அடிப்படை உரிமை; மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை | தினகரன்

ஹபாயா அடிப்படை உரிமை; மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை

- சண்முகா கல்லூரிக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியைகளை ஹபாயா அணிந்து செல்ல பரிந்துரை
- குரல்கள் இயக்கம் பல்வேறு மட்டங்களில் முயற்சி

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி நிர்வாகம் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வருவதைத் தடை செய்தமை தொடர்பான மனித உரிமை ஆணைக்க்குழுவின் இறுதி அறிக்கை கடந்த திங்கட்கிழமை (18) வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி நிர்வாகம் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வருவதைத் தடை செய்ததை அடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் தங்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் மனித உரிமை ஆணைக்க்குழுவின் இந்த இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளின் ஆடை உரிமைகளுக்காகவும் குரல்கள் இயக்கம் பல்வேறு மட்டங்களில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

ஆணைக்குழுவின் அறிக்கையில் முஸ்லிம் ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடையை அணிந்து கொண்டு வர பாடசாலை நிர்வாகம் மறுத்தமையின் மூலம் சண்முகா இந்துக் கல்லூரி அவ்வாசிரியைகளின் அடிப்படை உரிமைகளை மீறியிருக்கிறது என்றும் அவ்வாசிரியைகள் மீண்டும் ஹபாயா அணிந்து கொண்டு திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரிக்கு வருவதற்கு அனுமதியளிக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18.02.2019 என்று திகதியிடப்பட்டு, மனித உரிமை ஆணையாளர்கள் இருவரினால் கையெழுத்திடப்பட்டு வெளியாகியுள்ள 9 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய விபரங்கள் வருவாறு;

மனித உரிமை ஆணைக்குழுவின் கண்டறிதல்கள்

01. 1923ம் ஆண்டு தங்கம்மா சண்முகப்பிள்ளை என்ற பெண்மணியால் உருவாக்கப்பட்ட சண்முகா இந்து மகளிர் கல்லூரி 1934ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் உள்வாங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அக்கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியைகள் இந்துக்களின் கலாச்சார ஆடையான சேலையை அணிந்து கொண்டு வர வேண்டும் என்ற எழுதப்படாத விதியிருப்பதாக அதிபர் குறிப்பிடுகிறார். பாடசாலையின் வரலாறு எப்படி இருப்பினும் இது ஒரு தேசிய பாடசாலையாக இருப்பதாலும்,நிர்வாக நிதியை அரசாங்கத்திடமிருந்து பெறுவதனாலும் இக்கல்லூரி தேசிய சட்ட வரையறைகள், ஒழுங்குகளுக்கும் முக்கியமாக அரசியல் யாப்பிற்கும் உட்பட்டதாகும்.

02. அரசியல் யாப்பு உறுப்புரை 12(2) ஒரு பிரஜை சமயத்தின் பெயரால் துஷ்பிரயோகப்படுத்தப்படக் கூடாது என்றும் உறுப்புரை 10 ஒருவர் தாம் விரும்பிய மதத்தைத் தெரிவு செய்யும் உரிமையையும்,,உறுப்புரை 14(1) (ஈ)  ஒவ்வொரு பிரஜைக்கும் தனியாகவும், கூட்டாகவும், தனிமையிலும் பொது இடத்திலும் அவருடைய மதத்தை வணங்குவதற்கும் பின்பற்றுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்குமான உரிமைகளை வழங்கியிருக்கிறது.

03.  ஆசிரியைகள் முன்னர் சேலைதான் அணிந்து வந்தார்கள் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளமுடியாது.ஏனெனில் அரசியல் யாப்பின் உறுப்புரை 10 ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கு ஒரு பிரஜைக்கு இருக்கும் சுதந்திரத்தில் கால எல்லையை நிர்ணயிக்கவில்லை. அதனால் அவ்வாசிரியைகள் முன்னர் சேலை அணிந்து கொண்டு வந்தார்கள் என்று கூறுவதன் மூலம் அவர்கள் இப்பொழுது ஹபாயா அணிந்து கொண்டு வர விரும்புவதைத் தடுக்காது.

04. ஆசிரியைகள் ஹபாயா அணிந்து கொண்டு வருவது அவர்களை ஏனைய ஆசிரியைகளில் இருந்து பிரித்துக் காட்டும் மற்றும் மாணவர்கள் பயப்படுகிறார்கள் போன்ற வாதங்கள் இனப்பல்வகைமை கொண்ட சமூகத்திற்குப் பொருத்தமானவை அல்ல.

05. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 688/12 யைத் தொடர்ந்து கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருப இலக்கம் 37/95ன் அடிப்படையிலும், மற்றும் உச்ச நீதிமன்றத்தின் FR 97/14 வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலும் முஸ்லிம்களின் கலாச்சார ஆடை என்பது இலங்கையின் கலாச்சாரத்திற்குள் உட்பட்டது என்பதோடு அவ்வாறான ஆடைகளை அணியும் உரிமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

06. ஆசிரியைகள் 01.01.2019ம் திகதி மீண்டும் சண்முகா கல்லூரிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு கற்பிப்பதற்காக நேரசூசிகள் வழங்கப்படவில்லை என்பதோடு விஷேட தேவை கொண்ட மாணவர்களுக்காகப் பயிற்சி பெற்ற ஆசிரியை ஒருவர் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவராக இருப்பதனால் விஷேட தேவைகள் கொண்ட மாணவர்களுக்கான பிரிவு இதுவரைக்கும் ஆசிரியர் இன்றி மூடப்பட்டுள்ளது.

07. ஆசிரியைகள் இடமாற்றப்பட்டமை ‘தேசிய இடமாற்றக் கொள்கைகள்’ இலக்கம் 2007/20க்கு முற்றிலும் முரணானது. அவ்வாசிரியைகள் தான் தோன்றித்தனமாகவும் வலுக்காட்டாயமாகவும் பிரதிவாதிகளால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

08. அரசியல் யாப்பின் சரத்து 10 மற்றும் 14 (ஈ) அத்தோடு முஸ்லிம் பெண்களின் ஆடை சம்பந்தமான கல்வி அமைச்சின் சுற்று நிருபம் 37/95க்கு முரணாக திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியும் அதன் நிர்வாகவும் ஒரு குறிப்பிட்ட வகையான ஆடையை அணிந்து வரக் கூடாது என்றும் ஒரு குறிப்பிட்ட வகையான ஆடையைத்தான் அணிந்து கொண்டு வர வேண்டும் என்றும் பணிக்க முடியாது.

09. ஆசிரியைகளின் வலுக்கட்டாயமான இடமாற்றமும், அவர்களின் கலாச்சார ஆடைகளை அணிந்து வருவதற்கான தடையும் அரசியல் யாப்பில் சரத்துக்கள் 12(1),12(2) என்பவற்றில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுகின்றன.

மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

01.இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள உறுப்புரைகள் 10,12(1),12(2),14(ஈ)ன் பிரகாரம் ஆசிரியைகளின் அடிப்படை உரிமைகளை முதலாவது பிரதிவாதியாகிய சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபர் மீறியிருக்கிறார். ஆசிரியைகள் அவர்களின் கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு மீண்டும் சண்முகா இந்துக் கல்லூரியிக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என ஆணையகம் பரிந்துரைக்கிறது.

02.மூன்றாம் மற்றும் நான்காம் பிரதிவாதிகளான மாகாணக் கல்விப்பணிப்பாளரும், கல்வி அமைச்சின் செயலாளரும் முறையான இடமாற்ற ஒழுங்குகளைப் பின்பற்றாமல் ஆசிரியைகளை இடமாற்றியதன் மூலம் அரசியல் யாப்பின் உறுப்புரைகள் 12 (1),(2) ல் கூறப்பட்டுள்ள ஆசிரியைகளின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர்.

03.மேற்பார்வையாளர்கள் என்ற தகுதியில் இருக்கும் வலயக்கல்விப் பணிப்பாளர்,மாகாணக் கல்விப் பணிப்பாளர்,கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் முறைப்பாட்டாளர்களின் முறைப்பாட்டுக்கான தீர்வுகளைக் கொடுக்காமல் அரசியல் யாப்பின் உறுப்புரைகள் 10, 14(ஈ) என்பவற்றில் கூறப்பட்டுள்ள ஆசிரியைகளின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர்.

04.பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு எந்தவிதமான தடையோ துஷ்பிரயோகமோ இன்றி சண்முகா இந்துக் கல்லூரிக்கு செல்வதை வலயக்கல்விப் பணிப்பாளர்,மாகாணக் கல்விப் பணிப்பாளர்,கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்.

05.வலயக் கல்விப் பணிப்பாளர் சமூகப் பல்வகைமை தொடர்பாக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோருக்கு நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும்.


Add new comment

Or log in with...