Saturday, April 27, 2024
Home » மூன்று சீன நிறுவனங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை

மூன்று சீன நிறுவனங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
December 17, 2023 1:48 pm 0 comment

சீனாவில் உய்குர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரை உள்ளடக்கிய கட்டாய தொழிலாளர் நடைமுறைகள் காரணமாக, COFCO சுகர் ஹோல்டிங் உட்பட மேலும் மூன்று சீன நிறுவனங்களின் இறக்குமதியை அமெரிக்கா கட்டுப்படுத்தியுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனி முதல் நெட்வேர்க் மின்மாற்றிகள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் – உய்குர் கட்டாய தொழிலாளர் தடுப்புச் சட்ட நிறுவனப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று மத்திய பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மையினரை தொடர்ந்து இனப்படுகொலை செய்வதாக அமெரிக்க அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் இதனுடன் தொடர்புடைய பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை “பொய்களை அடிப்படையாகக் கொண்டது” என்றும், “சின்ஜியாங்கின் செழுமை மற்றும் ஸ்திரத்தன்மையை அமெரிக்கா குறைத்து மதிப்பிடுவதோடு சீனாவின் அபிவிருத்தியை கட்டுப்படுத்த முயல்வதாக” சீனத் தூதரக ஊடகப் பேச்சாளர் லியு பெங்யு கூறினார்.

” இந்த முன்னெடுப்பை சீனா முழுமையாக எதிர்க்கிறது மற்றும் சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியாகப் பாதுகாக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் ” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு ஜூன் 2022 முதல் 2021 இல் சட்டத்தில் கையொப்பமிடப்பட்ட உய்குர் கட்டாய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தின் விளைவாக 2 பில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புள்ள 6,000 ஏற்றுமதிகள் தொடர்பில் மதிப்பாய்வு செய்துள்ளது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இருந்து பொருட்கள் உற்பத்தி செய்யப்படவில்லை அல்லது கட்டாய உழைப்புடன் இணைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கும் வரை, அந்தச் சட்டத்தின் கீழ் அவற்றைப் பெற முடியாது.

“உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் கட்டாயத் தொழிலாளர்களின் பயன்பாட்டை ஒழிப்பதில் உறுதியாக உள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு சம்பந்தப்பட்ட அமைப்புகள் பொறுப்பேற்க வேண்டும்” என்று உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் மற்றும் ஏனைய முஸ்லிம் சிறுபான்மை குழுக்களுக்கு சீன அதிகாரிகள் தொழிலாளர் முகாம்களை அமைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளதோடு சீனா இந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாக ரொயிட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT