Friday, April 26, 2024
Home » அமலோற்பவ மாதா திருநாள்

அமலோற்பவ மாதா திருநாள்

மாசற்ற வாழ்வுக்கான அழைப்பை விடுக்கும் பெருவிழா டிசம்பர் 8ல்

by damith
December 5, 2023 6:00 am 0 comment

மார்கழி மாதம் என்றாலே பண்டிகைகளின் மாதம். கொண்டாட்டங்களில் மாதம். மற்றும் ஒரு வருடத்தை வரவேற்பதற்காக மிகுந்த சுறுசுறுப்புடன் எம்மை ஆயத்தப்படுத்தும் மாதம் இது.

அத்து நம் ஆண்டவர் இயேசு பூமியில் அவதரித்த நத்தார் பண்டிகைக்கான மாதம்.

“இதோ மகிழ்ச்சியூட்டும் செய்தி! உங்களுக்காக மீட்பர் பூமியில் பிறக்கப் போகின்றார்” என ஆண்டவரின் தூதர் மகிழ்ச்சி தரும் செய்தியை நமக்கு வழங்கிய மாதம். அந்த மகிழ்ச்சி இந்த மாதம் பிறந்ததோடு இன, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மனங்களுக்குள்ளும் குடிகொள்ளும் மாதம் இது.

இந்த மகிழ்ச்சியான காலத்தில் தான் கத்தோலிக்கத் திருச்சபையானது டிசம்பர் 8ஆம் திகதி அமலோற்பவ அன்னையின் திருவிழாவைக் கொண்டாடுகின்றது. மாதா பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இந்த திருவிழாவுக்கான அமலோற்பவ மாதா என்ற சிறப்புப் பெயரும் அவருக்குள்ளது.

அமலோற்பவ அன்னை என்பது இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வழங்கப்படுகின்ற சிறப்புப் பெயரும் மரியாள் பிறப்பு நிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மையை வெளிப்படுத்தும் போதனையுமாகும்.

இந்த மறையுண்மையைக் கத்தோலிக்க திருச்சபைஅறிக்கையிடுகிறது பொதுவான கிறிஸ்தவ நம்பிக்கையின்படி ஆதாமினால் தோன்றிய பாவம் மரபுவழியாகத் தொடர்ந்து உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறக்கிறது.

இது ஜென்மப் பாவம் அல்லது பிறப்புநிலைப் பாவம் என்று குறிப்பிடப்படுகிறது. இப் பாவம் மனிதரை கடவுளின் அருள் நிலையிலிருந்து பிரித்து உலகின் தீய நாட்டங்களுக்கு அடிமை யாக்குகிறது.

கடவுள் உலக மீட்பரின் தாயாகுமாறு மரியாளை தொடக்கம் முதலே தெரிந்துகொண்டார். எனவே, மரியாளுக்கு மிகுதியான அருளைப் பொழிந்து பாவ மாசற்ற நிலையில் தாயின் வயிற்றில் கருவாக உருவாகச் செய்தார்.

இதுவே மரியாளின் அமல உற்பவம் என்று அழைக்கப்படுகிறது. மீட்பரின் தாயானதால் மீட்பின் பேறுபலன்கள் மரியாவுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டன.

இயேசுவின் தாய் மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை கிறிஸ்தவ நம்பிக்கையாகத் தொடக்ககாலத் திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். ஆயினும் அந்த மறையுண்மையை அனைத்துலகுக்கும் அதிகாரபூர்வமாக எடுத்துரைத்தவர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ஆவார்

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் 1854ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி இயேசுவின் அன்னையாகிய மரியாள் பற்றிய மறையுண்மையை வழுவா வரத்தோடு அதிகார பூர்வமாக அறிவித்தார்

புனித கன்னி மரியாள் தாம் கருவில் உருவான முதல் நொடியிலிருந்தே வல்லமைமிக்க கடவுளின் அருளாலும் சலுகையாலும் மனுக்குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டு பிறப்புநிலைப் பாவக் கறை அனைத்தினின்றும் பாதுகாக்கப்பட்டார்.

இன்றைய காலகட்டத்தில் திருவருகைக் காலத்தில் அன்னை மரியாள் நமக்கு வழங்கும் நற்செய்தி என்னவென்றால்,நாம் அனைவரும் மரியாளைப்போன்று அமல உற்பவமாகப் பிறக்கும் பேறு கிடைக்கவில்லை என்றாலும் நம்மாலும் மாசற்றவர்களாக வாழ முடியும். அதற்கான ஆற்றலை நாம் திருமுழுக்கின் மூலம் பெற்றுக் கொண்டுள்ளோம் என்பதே.

நாம் மாசற்றவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகவே கடவுள் இறைமகன் இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அதனை புனித பவுல் அடிகளார் “நாம் தூயோராகவும் மாசற்றோ ராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.” ( எபேசியர் 1:4)என குறிப்பிடுகின்றார்.

கன்னி மரியாள் நம்மைப் போன்று மனிதப் பெண் தான். கடவுள் அவருக்கு கொடுத்த தூய உடலையும் உள்ளத்தையும் பாவத்திலிருந்து தொடர்ந்து தம் வாழ்நாள் முழுவதும் அவர் பாதுகாத்தார். ஆணவத்திற்கு சிறிதும் இடம் கொடுக்கவில்லை. தாழ்ச்சியோடு இறை சித்தத்தை நிறைவேற்ற தம்மை முழுமையாக அர்ப்பணித்தார்.

நாமும் கிறிஸ்து இயேசுவின் மூலம் திருமுழுக்கின் வழியாக புனிதப்படுத்தப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். மாசற்ற வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம். அந்த வகையில் நாம் எந்தளவிற்கு எமது புனிதத்தன்மையை பாதுகாக்க முயற்சி செய்கிறோம் என்று இந்த சிறப்பு திருவருகை காலத்தில் சிந்திப்போம்.

இயேசுவின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, தூய்மை என்ற புண்ணியங்களை எமது வாழ்நாளில் மேற்கொள்வோம். அதற்காக ஆண்டவரின் அருள் வரப் பிரசாதத்தை வேண்டுவோம்.

எல். செல்வா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT