Home » சீரற்ற காலநிலை: அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிப்பு

சீரற்ற காலநிலை: அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிப்பு

- மலையக மக்களுக்கான உதவிகள் வழங்க ஏற்பாடு

by Prashahini
December 4, 2023 4:59 pm 0 comment

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலுக்கமையவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக இயங்கும் இந்த குழுவில் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவகர்கள், பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகள், தோட்ட நிர்வாகத்தினர் உள்ளடங்கியுள்ளனர் என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் கண்டி, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன.

இவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதும், அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதும் இக்குழுவின் பிரதான பணியாகும்.

அந்தவகையில் சீரற்ற காலநிலையால் கம்பளை, கோணடிக்கா தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி செய்து கொடுத்தார்.

அத்துடன், ஹட்டனில் வெள்ள அபாயம் ஏற்பட்ட ஸ்டிரதன் பகுதிக்கும் தேவையான நடவடிக்கைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

ஏதேனும் அனர்த்த அபாயம் இருப்பின் அது தொடர்பில் பெருந்தோட்ட நிதியத்துக்கு அல்லது கிராம சேவகருக்கு அல்லது தோட்ட அதிகாரிக்கு அறிவிக்குமாறும் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

அத்துடன், சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஹட்டன் சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT