கருவிலுள்ள சிசுக்களின் சேஷ்டைகள்! | தினகரன்

கருவிலுள்ள சிசுக்களின் சேஷ்டைகள்!

குழந்தைகள் என்றாலே அழகுதான். அவர்களுடைய சிரிப்பு, அழுகை, முகபாவனைகள், கொட்டாவி விடுதல், உறங்குவது என் அத்தனையுமே ஒருவித அழகுதான். ஆனால் கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களையெல்லாம் குழந்தைகள் செய்யும்?

நாம் மேற்கூறிய பல விஷயங்களைக் குழந்தை கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்து விடும். இனிப்பு சுவையை குழந்தைகள் கருவிலேயே ரசித்து விழுங்கும். அம்மாவின் குரலைக் கேட்டு அசைவது என கருவறைக்குள் குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் அதிகம்.

கருவில் இருக்கும் குழந்தை என்ன செய்கிறது என்பதை அறிய அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்து பார்த்த பொழுது, ஆச்சரியப்படுத்தும் வகையில் குழந்தை கருவில் அழுது கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இரட்டைக் குழந்தைகளுக்கு இடையே எப்போதுமே நெருக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இவர்களுக்கு இடையே இருக்கின்ற இந்த பிணைப்பு என்பது கருவறைக்குள்ளேயே தொடங்கி விடுகிறது. இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களில் அம்மா பேசுவதை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பர்.

முதல் மூன்று மாதத்தின் பொழுதிலிருந்தே குழந்தைக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்து விடும். இதை கர்ப்பிணிகளால் உணர்ந்து கொள்ள முடியாது. நன்கு கூர்ந்து கவனித்தால் சிறியசிறிய நகர்வுகளை உணர்ந்து கொள்ள முடியும். இவற்றை அல்ட்ரா சவுண்ட் கருவியின் மூலம்தான் பார்க்க முடியும்.

குழந்தை கருவறைக்குள் இருக்கும் 26 வது வாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகளை புலப்படுத்த ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில்தான் கருவறைக்குள் முதன்முதலில் சிரிக்கவே ஆரம்பிக்கும்.

குழந்தைகள் கொட்டாவி விட்டாலே மிக அழகாக இருக்கும். அதிலும் குழந்தை அம்மாவின் கருவறைக்குள் இருக்கும் பொழுது, அழகாக கொட்டாவி விட்டால் எப்படி இருக்கும்?

வயிற்றில் கரு உற்பத்தியாகி, மூன்று மாதங்கள் ஆன பின்பு குழந்தைக்கு சிறுநீர் உற்பத்தி ஆக ஆரம்பித்து விடும். அதன்பின் வயிற்றுக்குள் கருவறைக்குள்ளேயே குழந்தை சிறுநீர் கழிக்க ஆரம்பித்து விடுகிறது.

வயிற்றுக்குள் கரு தோன்றி, 28 வது வாரத்தில்தான் குழந்தை முதன் முதலாகக் கண்களைத் திறக்க ஆரம்பிக்கும். கர்ப்பிணியின் வயிற்றுப் பகுதி அதிக வெளிச்சத்தில் படுகிற பொழுதுதான் முதன் முதலாக குழந்தை கண்ணைத் திறக்க ஆரம்பிக்கும். சிறிது நேரம் மட்டும்தான் கண் திறந்திருக்கும். இதுபோன்ற அதிக வெளிச்சத்தை உணருகின்ற போதெல்லாம் சிசு கண் திறந்து மூடும்.

கர்ப்பிணிப் பெண்கள் எந்த உணவை உட்கொண்டாலும் அந்த சுவையை அம்னியோடிக் அமிலத்தின் மூலமாக சிசு உணர்ந்து கொள்ளும்.


Add new comment

Or log in with...