Saturday, April 27, 2024
Home » மைத்திரி, பூஜித் ,ஹேமசிறி, சிசிர இதுவரை ரூ.3,68,25,000 வைப்பீடு

மைத்திரி, பூஜித் ,ஹேமசிறி, சிசிர இதுவரை ரூ.3,68,25,000 வைப்பீடு

முழுமையாக வழங்கியதும் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும்

by Gayan Abeykoon
November 15, 2023 1:07 am 0 comment

யிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்த்தன, ஹேமசிறி பெர்னாண்டோ, சிசிர மென்டிஸ் ஆகியோர் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் வைப்புக் கணக்கில் இதுவரை 03 கோடியே 68 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முழுமையான நிதியை இவர்கள் வைப்பிலிட்ட பின்னர் நீதிமன்றத்தின் கண்காணிப்புடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இந்நிதி நட்டஈடாக வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு 2023.01.12 இல், வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்த்தன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் சிசிர மென்டிஸ் ஆகியோர் இந்த தீர்ப்பில் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அப்போதைய அரசாங்கம் கொள்கை அடிப்படையில் நட்டஈடு வழங்கியது.இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களின்படி உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 12 இல், தீர்ப்பளித்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாவையும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர 7.5 கோடி ரூபா, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன 7.5 கோடி ரூபா, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் 05 கோடி ரூபா, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மென்டிஸ் 01 கோடி ரூபா மற்றும் அரசாங்கம் 01 கோடி ரூபாவை செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தவிட்டது. இந்நிதியை நீதி அமைச்சின் கீழ் இயங்கும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் வைப்பிலிடுமாறும் நீதிமன்றம் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபா, நிலந்த ஜயவர்த்தன 4.1 மில்லியன் ரூபா, பூஜித ஜயசுந்தர 1.7 மில்லியன் ரூபா,ஹேமசிறி பெர்னாண்டோ 05 மில்லியன் ரூபா,சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபா, அரசாங்கம் 01 மில்லியன் ரூபா என்ற வகையில் 03 கோடியே 68 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை அந்த அலுவலகத்தின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இந்த நிதி தொடர்பான விபரம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முழுமையான தொகை வைப்பிலிடப்பட்டதும் நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்படும் என்றார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT