Friday, April 26, 2024
Home » திருகோணமலை பிரதேச மக்கள் உள்ளத்தில் என்றும் வாழும் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத்

திருகோணமலை பிரதேச மக்கள் உள்ளத்தில் என்றும் வாழும் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத்

அன்னாரின் 36 ஆவது நினைவுதினம் இன்று

by damith
November 13, 2023 8:51 am 0 comment

அரசியல், இலக்கியம் என இரு துறைகளிலும் சாதனை நிலைநாட்டிய ஒரு மனிதராக மறைந்த மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் திகழ்ந்தார். இலங்கை வாழ் முஸ்லிம் மக்களது உரிமைக்காகவும் பாதுகாப்புக்காவும் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த அவர், திருமலை மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கியிருந்த சிறுபான்மை சமுகத்திற்கும் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்திற்கும் கலங்கரை விளக்காக திகழ்ந்தார்.

1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15இல் கிண்ணியாவில் முஹம்மது சுல்தான் அப்துல் லெத்திப் என்ற கிராம உத்தியோகத்தருக்கு மகனாக அவர் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை பெரியகிண்ணியா அரசினர் ஆண்கள் வித்தியாலத்திலும் இடைநிலைக் கல்வியை திருமலை இந்துக் கல்லூரியிலும் உயர்கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும் பெற்றார்.

தனது மேற்படிப்புக்காக இந்தியா சென்ற அவர், திருச்சி ஜமால் கல்லூரி, புனா வாதியா கல்லூரி, சென்னை மாநில கல்லூரி ஆகியவற்றில் கற்று தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இதனால் திருமலையின் முதலாவது முஸ்லிம் பட்டதாரியானார். தனது இளமைக் காலத்தை சமூக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத், இந்தியாவில் படிப்பை முடித்த பின்னர் 1959ஆம் ஆண்டு கிண்ணியா சிரேஷ்ட பாடசாலையின் அதிபராகக் கடமையேற்றார். மாணவர்களிடம் கல்வி, ஒழுக்க விழுமியங்கள் பேணப்பட வேண்டுமென்பதில் கண்டிப்பாக இருந்தார்.

கிண்ணியாவில் அவர் அதிபராக இருந்த காலம் மாணவர்களின் பொற்காலம் ஆகும். மாணவர்களுக்கு தனியான சீருடை வேண்டுமென வலியுறுத்தி அதை செயலிலும் காட்டினார். திருமலை மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளுக்கு முன் மாதிரியாக கிண்ணியா சிரேஷ்ட பாடசாலையாக மிளிர்வதற்கு அவர் வழிகோலினார். கல்வியே முஸ்லிம் சமூகத்தின் சொத்துயென தனது பேச்சிலும் செயலிலும் வெளிக் காட்டியவர்.

அதிபர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து சமூகப் பரப்பில் தனது செயற்பாடுகளை விஸ்தரித்தார். அவர் இளைஞர் சக்தியை அதற்காக பயன்படுத்த முனைந்தார். கிண்ணியாவில் எந்த விதமான நோக்கங்களுமின்றி கிடந்த இளைஞர்களை ஒருமுகப்படுத்தினா ர். அவர்களை ஒரு அமைப்பின் கீழ் நெறிப்படுத்த முயற்சித்தார். இதற்கமைவாக கிண்ணியா முற்போக்கு வாலிபர் எ ஆண்டு உருவாக்கி செயற்பட்டார்.

சிறந்த பேச்சாற்றலும் சமூக வேட்கையும் கொண்ட மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் கிண்ணியா முற்போக்கு வாலிபர் மன்றம் மூலம் பல வகைப்பட்ட சமூகப் பணிகளை முன்னெடுத்து வந்தார். 1960ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மூதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 1977ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் பொது மராமத்து பதிலமைச்சராகவும், தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராகவும் தொடர்ச்சியாக 17 வருட நேரடி அரசியலில் ஈடுபட்டார்.

சிறந்த நாவன்மை மிக்க பேச்சுமூலம் சிம்மக் குலோன் என பாராட்டுப் பெற்ற அவர், முஸ்லிம் சமுகத்திற்காக மட்டும் பாடுபடவில்லை, ஏனைய இனங்களுடனும் நல்லுறவைப் பேணி வந்தார். தமிழ் மக்களுடன் பின்னிப் பிணைந்த உறவைக் கொண்டியிருந்ததனால் அவர்களின் அபிமானத்தையும் பெற்றார். தான் சாந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறுபான்மை மக்களுக்கு பிழையான முடிவுகளை எடுத்த போதெல்லாம் உடனுக்குடன் சுட்டிக்காட்டியவர் அவர். காலஞ்சென்ற ஸ்ரீமாவே பண்டாரநாயக்க, பீலிஸ் டயஸ் பண்டாரநாயக்க, கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அகியோருடன் நல்லுறவைப் பேணி சமுகத்தின் பிரச்சினைகளை வென்றெடுத்தார்.

கந்தளாய் குளத்தின் நீரை திசைதிருப்பி மாவட்ட விவசாயிகளுக்காக உழைத்தார். கிண்ணியாவில் இஸ்லாமிய கலை விழாவை நடத்தி இஸ்லாமிய நுன்கலை திறமைகளை வெளிக்கொணர்வதற்கு அவர் செயலாற்றினார். இஸ்லாமிய நுன்கலை இலக்கியம் தொடர்பான கண்காட்சியொன்றை நடத்தி கலை, கலாசார விழுமியங்களை பன்முகப்படுத்தினார்.

தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராக அவர் பணியாற்றிய காலத்தில் முஸ்லிம் சேவையின் ஒலிபரப்பு நேரத்தை அதிகரிக்கச் செய்தார். முஸ்லிம் சேவையை ஓர் உயிரோட்டம் உள்ள சேவையாக நேர்களின் மனதிற்கு மகிழ்வூட்டக் கூடிய சேவையாக மாற்றியமைத்த பெருமை அன்னாரையே சாரும். அரபுலக நாடுகளுடனும் அதன் தலைவர்களுடனும் மிக நெருங்கிய உறவை கொண்டிருந்த மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத், அதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள் பயனடையும் திட்டங்களை உருவாக்கி அதில் வெற்றி கண்டார். நவம்பர் மாதம் 13ஆம் திகதியான இன்று அவர் மறைந்து முப்பத்தாறு வருடங்களாகின்றன. அவர் திருகோணமலை மாவட்ட மக்களின் மனங்களிலே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது புதல்வர் நஜிப் ஏ. மஜீத் கிழக்கின் முதலமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜமால்தீன் எம். இஸ்மத் கிண்ணியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT