Saturday, April 27, 2024
Home » நாட்டில் உணவுப் பணவீக்கம் 2024 இல் மேலும் குறைவடையும்

நாட்டில் உணவுப் பணவீக்கம் 2024 இல் மேலும் குறைவடையும்

by sachintha
November 10, 2023 6:03 am 0 comment

உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை புரிந்து கொள்வதற்காக, உணவு உற்பத்தி தொடர்பான அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நலின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலின் பெர்னாண்டோ,

நாம், கடந்த சில நாட்களாக நாட்டின் உணவு விலை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தினோம். அதேபோன்று நமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக எமக்கு உள்ள பிரதான வருமான வழியான வரி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். அந்த வகையில் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 50 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்தது. இதன் ஊடாக நாட்டில் சீனியின் விலை அதிகரிக்கப்படுமாயின் அதன் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, அதனைத் தடுப்பதற்காக சீனிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

நாட்டில் உற்பத்திகள் நுகர்வோரைச் சென்றடையும் அளவு தொடர்பில் நாம் தற்போது ஆய்வுகளை நடத்தி வருகின்றோம். உதாரணமாக நாட்டில் மேற்கொள்ளப்படும் பால் உற்பத்தியில் நேரடியான நுகர்வுக்காக பயன்படுத்தப்படும் பாலுக்கு மேலதிகமாக பால் சார்ந்த உற்பத்திக்கு பால் பயன்படுத்தப்படுகின்றது. பால் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இது போன்ற தொழில் முயற்சியாளர்கள் இந்த பால்சார் உற்பத்திகளில் இருந்து விலகிக்கொள்கின்றனர்.

இதன் காரணமாக நாட்டின் தேவைக்காக நாம், பால்சார் உற்பத்திகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். உதாரணமாக பால் மாவைக் குறிப்பிடலாம். இதற்காக பெருமளவில் அந்நியச் செலாவணியை நாம் வழங்குகின்றோம். இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு எமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மீன்பிடி அமைச்சு, கமத்தொழில் அமைச்சு மற்றும் கால்நடைகள் அமைச்சு போன்ற அமைச்சுகளுக்கு தெரிவித்துள்ளோம்.

இவ்வாறான பல்வேறு பொருட்கள் தொடர்பில் நாம் தற்போது அவதானம் செலுத்தி வருகின்றோம். நாட்டில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி, அந்த உற்பத்திகளில் நாட்டினுள் விநியோகிக்க எதிர்பார்க்கும் அளவு, அடுத்த வருடத்தில் அவற்றின் விலைகள் தொடர்பில் எமக்கு அறிக்கையளிக்குமாறு நாம் அமைச்சுகளுக்கு அறிவித்துள்ளோம்.

உதாரணமாக நெல் உற்பத்தியை எடுத்துக்கொண்டால் சிறு போகம், பெரும் போகம் ஆகிய இரு போகங்களினதும் விளைச்சல், அவற்றில் விநியோகிக்கப்படும் நெல்லின் அளவு மற்றும் அதன் விலைகள் தொடர்பிலும் அரிசியின் விலைகள் குறித்தும் கணிப்பிட்டு எமக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளோம்.

இதன் ஊடாக நாட்டில் உணவுப் பாதுகாப்பை எவ்வளவு தூரம் எம்மால் பேணமுடியும் என்றும் அடுத்த வருடத்தில் எவ்வாறு விலைகளைக் கட்டுப்படுத்தலாம் என்றும் விலைகள் குறித்து எமக்கு ஒரு தெளிவைப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கின்றோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT