பார்வையாளரின் கண்ணில் மண்ணை துாவி பணம் பட்டுவாடா ஆரம்பம் | தினகரன்

பார்வையாளரின் கண்ணில் மண்ணை துாவி பணம் பட்டுவாடா ஆரம்பம்

இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் பார்வையாளர்களின் கண்ணில் மண்ணைத் துாவி ஒரு வாக்குக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வினியோகம் செய்யும் பணிகள் தைரியமாக துவங்கி உள்ளன. எப்போதும் இல்லாத வகையில் பணம் தாராளமாக புரளத் துவங்கி உள்ளதால் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை ஆர்.கே நகர் தொகுதி ஏப்ரலில் நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப் பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது. அங்கு டிச. 21ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. வேட்பாளர் பட்டியல் இறுதியான நிலையில் மூன்று நாட்களாக பிரசாரம் களை கட்டி உள்ளது. தற்போதும் மீண்டும் வாக்காளர்களை கவர பணப் பட்டுவாடா செய்ய அரசியல் கட்சியினர் பல்வேறு நுாதன வழிகளை கண்டுபிடித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் பணப் பட்டுவாடா செய்ய வேண்டிய வாக்காளர்களின் பட்டியல் சரிபார்க்கும் பணியில் நான்கு பேர் குழு ஈடுபட்டது. வீடு வீடாகச் சென்ற இந்தக் குழுவினர் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் கையடக்கத்தொலைபேசி எண்களையும் பெற்றுச் சென்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை வாக்குகள் உள்ளன என்பதையும் கணக்கிட்டுச் சென்றனர்.

படித்த பெண்கள் ஏஜன்டாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்காளர்களை கையடக்கத்தொலைபேசி வழியாக தொகுதிக்கு வெளியே குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து பணப் பட்டுவாடாவை கனகச்சிதமாக செய்கின்றனர்.

தினமும் அவர்கள் 100 குடும்பங்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் 10 ஆயிரம் ரூபாய் கமிஷனாக வழங்கப்படுகிறது. பணப் பட்டுவாடா முறையாக நடந்ததா என வாக்காளர்களை கையடக்கத்தொலைபேசியில் அழைத்து மற்றொரு குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

பிரதான கட்சிகள் 5,000 ரூபாய் சுயேச்சை தரப்பில் 10 ஆயிரம் ரூபாய் என பண பட்டுவாடா நடக்கிறது. இதன்படி ஒரு வாக்குக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தொகுதி முழுவதும் பறக்கும் படையினர் கண்காணிப்பு குழுக்கள் சுற்றி வருவதால் தொகுதிக்கு வெளியே அழைக்கப்பட்டு பண வினியோகம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நேதாஜி நகரைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் கூறியதாவது: கடந்த சனிக்கிழமை ஒரு வேட்பாளரின் ஆதரவாளர் கையடக்கத்தொலைபேசியில் அழைத்தார்; 'ராயபுரம் மேம்பாலத்தின் பின்புறம் வாருங்கள்; வாக்குக்கு 10 ஆயிரம் ரூபாய் என உங்கள் குடும்பத்தில் உள்ள மூன்று வாக்குகளுக்கும் 30 ஆயிரம் ரூபாய் தருகிறோம்' என்றனர். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறையை பின்பற்றி நுாதனமாக பண பட்டுவாடா செய்கின்றனர்.

தண்டையார்பேட்டை பகுதிகளில் வெள்ளை சீட்டில் ரகசிய வார்த்தைகளை கிறுக்கி தருகின்றனர். அதை குறிப்பிட்ட மளிகை கடையில் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். வாக்குகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இதே துண்டு சீட்டை கொடுத்து நகைக்கடைகளில் தங்கம் வாங்கி கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

சில இடங்களில் பணத்தை கொடுத்ததும் 'இந்த சின்னத்திற்கு தான் வாக்களிக்கவும்' என சத்தியம் செய்ய வைக்கின்றனர். பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வோம்; அது அவர்கள் பணம் அல்ல; மக்களிடம் கொள்ளையடித்தது தான். ஆனால் எந்த வேட்பாளரை பிடிக்கிறதோ அவர்களுக்கு தான் வாக்களிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொகுதியில் பணப் பட்டுவாடா குறித்து கண்காணித்து வரும்

மத்திய உளவுத்துறை போலீசார், ஆதாரப்பூர்வமான தகவல்களை டில்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தேர்தல் பணிகளில் குழப்பம் ஏற்பட்டதால் தேர்தல் அதிகாரி வேலுசாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார். இவருடைய கண்காணிப்பு துல்லியமாக இருந்ததை கடந்த பிரசாரத்தின்போது பார்க்க முடிந்தது.

பணப் பட்டுவாடா நடந்ததை இவர் தான் கண்டறிந்தார்; மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பினார்; தேர்தல் நின்றது. இப்போதும் எக்கச்சக்கமாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதால் இவரது கண்ணில் அது தப்பாது என்றே கருதப்படுகிறது.

'பணப்பட்டுவாடாவை தடுத்து தேர்தலை நேர்மையாக நடத்த முடியாவிட்டால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்' என தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இவரும் தனக்கு கிடைக்கும் தகவல்களை மேலிடத்திற்கு தெரிவித்து வருகிறார்.

தொகுதி முழுவதும் தேர்தல் அதிகாரிகள் சுற்றி வந்தாலும் அவர்களின் கண்ணில் மண்ணைத் துாவி வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சுயேச்சைகளும் தைரியமாக பண பட்டுவாடாவை செய்து வருகின்றனர்.

இனி என்ன நடக்கிறது என்பதை, பிரவீன் நாயர் கண்காணிப்பார். அவருடைய கண்காணிப்பின் அடிப்படையிலேயே தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பதை அறிய முடியும். 


There is 1 Comment

PUDHU 2000,500 RUBAI NOTTA YAR VANGURANGANU PATHUKKITTU AVANGA ACCOUNT NO PAN NO LA ATTACH PANNITA YARMULAM FORM AGUTHUNU EASYA KANDUPIDITHUVIDALAM.

Pages

Add new comment

Or log in with...