Home » இங்கிலாந்து அணி எம்மை குறைத்து மதிப்பிட்டதாகக் கூறுகிறார் தீக்ஷண

இங்கிலாந்து அணி எம்மை குறைத்து மதிப்பிட்டதாகக் கூறுகிறார் தீக்ஷண

by Rizwan Segu Mohideen
October 28, 2023 9:36 am 0 comment

உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் இங்கிலாந்து தமது அணியை குறைத்து மதிப்பிட்டதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷண தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற தீர்க்கமான போட்டியில் இங்கிலாந்து அணியை 34 ஓவர்களுக்குள் 156 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை அணி அந்த இலக்கை 146 பந்துகளை மிச்சம் வைத்து 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது.

ஜோஷ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தில் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

“நாம் மூன்று போட்டிகளில் தோற்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்றிருந்ததால் அவர்கள் எம்மை குறைத்து மதிப்பிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.” என்று போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தீக்ஷண தெரிவித்தார்.

“ஒரு சாதாரண திட்டத்துடன் எமது பலத்தை காண்பித்ததன் காரணமாகவே போட்டி முடிவு எமக்கு சாதகமாகக் கிடைத்தது. எனவே அது தான் நாம் வெற்றிபெறக் காரணம்” என்று அவர் கூறினார்.

மர்மப் பந்துவீச்சாளராக அழைக்கப்படும் தீக்ஷண இந்தப் போட்டியில் 21 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். “இதுவரை நாம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதன் காரணமாக எமது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் போட்டி எமக்கு மகிழ்ச்சிகரமான முடிவைத் தந்தது.

அணி ஒன்றாக எதிர்வரும் நான்கு போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேற நாம் எதிர்பார்க்கிறோம்” என்று தீக்ஷண நம்பிக்கையை வெளியிட்டார்.

வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பத்தும் நிசங்க (77) மற்றும் சதீர சமரவிக்ரம (65) துடுப்பாட்டத்தில் சோபித்தனர். இருவரும் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 137 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

எனினும் முன்னாள் அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் அணிக்கு திரும்பியது இந்த வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது.

காயத்துக்கு உள்ளான மதீஷ பதிரணவுக்கு பதிலாகவே மத்தியூஸ் இலங்கை அணிக்கு திரும்பினார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மத்தியூஸ் முதல் விக்கெட்டாக 38 ஓட்டங்களுடன் இருந்த டேவிட் மாலனின் விக்கெட்டை சாய்த்தார். தொடர்ந்து மொயின் அலியை 15 ஓட்டங்களுடன் வீழ்த்தினார்.

2008 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அணிக்காக 106 டெஸ்ட் மற்றும் 222 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் அஞ்சலோ மத்தியூஸ் தான் வீசிய ஐந்து ஓவர்களுக்கும் 14 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்ததோடு அதில் ஒரு ஓட்டமற்ற ஓவரும் அடங்கும்.

“மிக அனுபவம் பெற்ற வீரர் ஒருவர் அணியுடன் இணைந்திருப்பது எமக்கு மிக மகிழ்ச்சியானது. அவர் இந்தியாவில் ஆடியிருக்கிறார். அவரிடம் இருந்து நாம் அதிகம் கற்க வேண்டும்” என்று சகலதுறை வீரரான மத்தியூஸ் பற்றி தீக்ஷண குறிப்பிட்டார்.

“நாம் பந்துவீசிய போது அவரது அனுபவத்தை நாம் போட்டியில் பயன்படுத்தினோம். அணியில் அவ்வாறான அனுபவ வீரர் ஒருவர் இருப்பது ஒட்டுமொத்த அணிக்கும் மிக மகிழ்ச்சியானதாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

1996 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை, 10 அணிகள் பங்கேற்றிருக்கும் இம்முறை உலகக் கிண்ணத்தில் ஐந்து போட்டிகளில் தனது இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT